Last Updated : 15 Dec, 2017 01:58 PM

 

Published : 15 Dec 2017 01:58 PM
Last Updated : 15 Dec 2017 01:58 PM

சுவாமி சரணம்! 29: ஏமாந்த அசுரர்கள்..!

அமிர்தக் கலசத்தை தன்வந்த்ரி பகவானின் கையில் இருந்து பிடுங்கிக் கொண்ட அசுரர்கள், தலைகால் புரியாமல் ஆடினார்கள். கள் குடித்த குரங்கென மமதையில் ஆடினார்கள். ஆணவம் இன்னும் தலைக்கேறியது. பாவம்... தேவர்கள்தான் நொந்துபோனார்கள்.

கவலையுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அசுரர்களையே வெறிக்கப் பார்த்தபடி இருந்தார்கள்/. என்ன செய்வது என்று தெரியவில்லை. அமிர்தக் கலசத்தை எப்படிக் கைப்பற்றுவது என்பது புரியவில்லை.

அப்போதுதான் இந்திரன், மகாவிஷ்ணு சொன்னதை யோசித்தான். ‘கவலைப்படாதீர்கள். நான் இருக்கிறேன். அசுரர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

அந்த நிமிடமே, மகாவிஷ்ணுவானவர், அழகிய மோகினியாக அங்கே உருமாறியிருந்தார். அசுரர்களுக்கு அருகில் அந்த மோகினிப்பெண் போல வந்து நின்றார்.

‘தேவர்களுக்கும் உங்களுக்கும் சண்டை வரலாம். உங்களுக்குள் சண்டை வரலாமா. இந்த அமிர்தக் கலசம்தான் உங்களுக்குள் நிகழும் சண்டைசச்சரவுக்குக் காரணமா. கவலையே வேண்டாம். என்னிடம் இந்த அமிர்தக் கலசத்தைக் கொடுங்கள். மிக அழகாக, சரிசமமாக, இங்கே இருக்கும் எல்லோருக்கும் அமிர்தத்தைப் பங்கிட்டுத் தருகிறேன், பாருங்கள்’ என்று கொஞ்சும் குரலில் சொன்னாள். கேட்டவர்கள் கிறுகிறுத்துப் போனார்கள்.

அந்த மயக்கத்தில் அவளிடம் அமிர்தக் கலசத்தைக் கொடுத்தார்கள். அவள் அதை வாங்கிக் கொண்டாள். எல்லோரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஏற்கெனவே அவளின் அழகைக் கண்டு அவளை... மோகினியை... வைத்த கண் வாங்காமல் வாய்பிளந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். இப்போதும் அப்படியே பார்த்தார்கள். பார்த்தது பார்த்தபடி இருந்தார்கள். ஆனால் என்ன... அமிர்தம் அவள் கையில் இருக்கிறது, அதனால் பார்க்கிறோம் என்று சொல்வதற்கு, சொல்லிச் சமாளிப்பதற்கு ஒரு காரணம் கிடைத்துவிட்டது.

அதேநேரம், இந்திராதி தேவர்கள் அப்பாடா எனப் பெருமூச்சு விட்டார்கள். முகத்தில் இப்போதுதான் நிம்மதியே வந்தது. அமிர்தம் வந்த கையுடன், அது அசுரர்களின் கைக்குப் போய்விட்டதால், கிடைக்குமா கிடைக்காதா, இழந்த தேஜஸைப் பெறுவோமா மாட்டோமா என்றெல்லாம் தவித்துக் கொண்டே இருந்தவர்கள், இப்போதுதான் சற்றே நிம்மதி அடைந்தார்கள்.

ஆனாலும் பயம் யாரை விட்டது. கைக்கு வந்தால்தான் எதுவுமே நிச்சயம். கைக்கு வந்ததது வாய்க்குள் விழுந்தால்தான், பழைய பொலிவு. வலிவு. தேஜஸ் எல்லாமே! அதற்குள் இந்த அசுரர்கள், அத்துமீறாமல் இருக்கவேண்டும். மீண்டும் அமிர்தக்கலசத்தை கைப்பற்றாமல் இருக்கவேண்டும். பகவானே... எங்களைக் காப்பாற்றுவது உன் கையில்தான் இருக்கிறது என்பது எப்போதுமான சத்தியம்.

இதோ... நிஜமாகவே எங்களைக் காப்பாற்றுவது உன் கையில்தான் இருக்கிறது. உன் கையில் உள்ள அமிர்தக்கலசத்தில் தான் இருக்கிறது. அமிர்தமாகவே இருக்கிறது. சுவாமி... அந்த அமிர்தத்தை உடனே வழங்கக் கூடாதா எங்களுக்கு” என்று இந்திரனும் மற்ற தேவர்களும் உள்ளுக்குள் வேண்டியபடியே இருந்தார்கள்.

இறைவன் எப்போதுமே இப்படித்தான். ஆபத்து சம்பத்துகளின் போது பக்தர்களுக்குத் துணையாகத்தான் இருப்பான். சத்தியத்துக்குப் பக்கத்தில்தான் இருப்பான். நல்லவர்களுக்கு ஏதேனும் பங்கமெனில், பார்த்துக் கொண்டிருக்கமாட்டான். சும்மா இருக்காமல், அவன் தன் வியூகங்களையெல்லாம் அமைத்து ஆசி வழங்குவான். கடவுள், நல்லவர்களை எப்போதும் கைவிடுவதே இல்லை.

எல்லோரையும் வரிசையாக நிற்கச் சொன்னாள் மோகினி. தேவர்கள் வரிசையாக நின்றார்கள். மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு போல், அசுரக்கூட்டமும் அதையடுத்து வரிசையாக நின்று கொண்டது.

மோகினி வந்தாள். கையில் இருந்து கலசத்தில் இருந்து அமிர்தம் எடுத்தாள். ஒரு துளி... ஒரேயொரு துளி. ஒவ்வொரு துளியாய், ஒவ்வொரு தேவர்களுக்கும் வழங்கினாள். வழங்கிக் கொண்டே வந்தாள். எல்லாத் தேவர்களுக்கும் வழங்கினாள். தேவர்கூட்டத்தில் ஒருவரைக் கூட விடாமல் அனைவருக்கும் பார்த்துப் பார்த்து அமிர்தம் வழங்கினாள்.

ஆனால் அசுரர்களுக்கு வழங்கவில்லை. ஒரேயொரு அசுரனுக்குக் கூட ஒரு துளி அமிர்தத்தைக் கூட வழங்கவில்லை. அமிர்தமும் தீர்ந்துவிட்டிருந்தது.

அசுரர்கள் இந்த முறை ஏமாந்தார்கள்.

கெட்டவர்கள் எப்போதுமே இப்படித்தான் ஏமாறுவார்கள். ஆரம்பத்திலெல்லாம் அசகாய சூரர்கள் போல் எல்லாமே நடப்பதாக நினைத்து செருக்குடன் திரிவார்கள். ஆனால் இறுதியில், எதுவுமில்லாமல் நொந்து போவார்கள். எதுவும் கிடைக்காமல் தலைகுனிவார்கள். கெட்டவர்கள் ஜெயித்ததாக எந்தப் புராணமும் இல்லை. கெட்டவர்களே ஜெயிப்பார்கள் என்பதாக எந்த வரலாறும் இல்லை.

ஆக, ஐயப்ப சுவாமிக்காக, அவரின் அவதாரம் நிகழ வேண்டும் என்பதற்காக, அரக்கி மகிஷி, இல்லாத ஆட்டமெல்லாம் ஆடினாள். பிரம்மாவிடம் யாருமே கேட்காத வகையில் வரமும் வாங்கி வைத்திருக்கிறாள். ஆணும் ஆணும் இணைந்து உருவாக்கும் 12 வயது பாலகனே என்னைக் கொல்ல வேண்டும் எனும் வரம் வாங்கிக் கொண்டுதான், இவ்வளவு தைரியமாக அட்டூழியங்கள் செய்கிறாள். வன்முறையில் ஈடுபடுகிறாள்.

வரம் கொடுத்த பிரம்மா முதல், மகிஷி வாங்கிய வரத்தால் துன்பங்களுக்கு ஆளான தேவர்கள், முனிவர்கள் என அனைவருமே சிவனாரிடமும் மகாவிஷ்ணுவிடம் நிற்க... அனைவரும் அவர்கள் பட்ட துயரங்களையும் வேதனையும் சொல்லிக் கதற... பரமேஸ்வரனும் பரந்தாமனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அங்கே... இன்னொரு முறை மோகினி அவதாரத்தை நிகழ்த்தத் தயாரானார் மகாவிஷ்ணு.

அவதாரத்தின் மூலம்இன்னொரு அவதாரம். அந்த அவதாரம்தான் ஐயப்ப அவதாரம். மணிகண்ட சுவாமியின் மகோன்னதமான அவதாரம்! மகிஷியை அழிக்க, கெட்டதை அழிக்க, நல்லதைக் காக்க எடுத்த அவதாரம்!

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!

- ஐயன் வருவான்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x