Published : 13 Jan 2018 12:29 PM
Last Updated : 13 Jan 2018 12:29 PM
பண்டிகையின் பெயரில் மாற்றம்... வழிபாட்டு முறைகளில் இன்னும் இன்னும் மாற்றங்கள். ஆனாலும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது பொங்கல் பண்டிகை!
தை மாதப் பிறப்பில், பொங்கல் திருநாள் கொண்டாடுகிறோம் நாம். இது ஊருக்கு ஊர் வித்தியாசம் என்பது போல், மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசம். ஆனால் இந்தியா முழுவதும் இந்தப் பண்டிகையின் ஹீரோ... சூரிய பகவான் தான்!
மார்கழி மாதத்தில், கேரளத்தில் பெண்கள் ‘திருவாதிரைக் களி’ (கைதட்டி ஆடும்) எனும் நடன விழா கொண்டாடுகிறார்கள். ஜனவரி மாதத்தில் பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள். இந்த விழாவைக் கொண்டாடினால், மகா சக்தியின் பேரருள் கிடைக்கப் பெறலாம் என்பது அந்த மாநிலத்து மக்களின் நம்பிக்கை என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியம்!
ஆந்திராவில், வயலைத் தெய்வமாகப் போற்றுகின்றனர். பயிரைக் கடவுளாக பாவித்து வணங்குகின்றனர். சூரிய பகவானே பிரதான தெய்வமாகக் கொண்டாடுகின்றனர். முக்கியமாக, மழையையும் அதாவது வருண பகவானையும் சூரிய பகவானையும் சேர்த்தே வழிபாடு செய்கின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் நம்மூரைப் போலவே, பாலில் அரிசியிட்டு, பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்கிறார்கள்! கிட்டத்தட்ட, தமிழகத்தைப் போலவே பொங்கல் பண்டிகை கோலாகலங்கள் இங்கே நடைபெறுகின்றன.
குஜராத்தில் பொங்கல் திருநாள் புனித நாளாகக் கருதப்படுகிறது. அன்று தத்துவம், சம்ஸ்கிருதம் மற்றும் கலை முதலானவற்றைப் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கும் விழாவாகவும் கொண்டாடுகின்றனர். புதிய பாத்திரங்கள் வாங்கி முதன்முதலாக பொங்கல் நாளில் பயன்படுத்துகிறார்கள்!
காஷ்மீரில் பொங்கல் திருநாள், அறுவடைத் திருவிழாவாக ‘கிச்சடி அமாவாசை’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அதேபோல, ஹரியானாவிலும் பொங்கல், அறுவடைத் திருநாளாக , விவசாய விழாவாக கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் அந்தநாளில், விளைந்த தானியங்களை உறவுகளுக்குள், தோழமைக்குள் பரிமாறிக் கொள்வார்கள்.
பஞ்சாபில் ‘லோரித் திருநாள்’ என்று பொங்கல் பண்டிகையைச் சொல்கிறார்கள். குளிருக்கு விடை கொடுக்கும் விதமாக, பெரிய அக்னி குண்டங்கள் மூட்டி, யாகம் வளர்த்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பரிசுப் பொருட்கள் கொடுத்துக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
மேற்கு வங்காளத்தில் பொங்கலின் பெயர் ‘கங்கா சாகர் மேளா’. அன்று கங்கைக் கரையில் உறவுகளும் அக்கம்பக்கத்தாரும் சூழ, கும்மியடித்து, ஆடிப் பாடி நதியில் நீராடி சூரிய வணக்கம் செய்கின்றனர்.
பொங்கல் திருநாளை, அஸ்ஸாமில் ‘போகலி பிஹீ’ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். . அன்று பாரம்பரிய உடை அணிந்து, இரவு முழுக்க உறவினர்கள், நண்பர்களுடன் ஆட்டமும் பாட்டமுமாக மகிழ்வார்கள்! அறுசுவை விருந்தும் இருக்கும். விடியும் வேளையில் பெரிய அளவில் தீ மூட்டி, அந்த அக்னியையே கடவுளாக பாவித்து வணங்குவார்கள்!
வடமேற்கு மாநிலங்களில் மழைப் பண்டிகைதான் பொங்கல். இந்திர விழாவும் மிகச் சிறப்பாக நடைபெறும். அன்று சூரிய பகவானையும் கிருஷ்ணரையும் வணங்கி பிரார்த்தனை செய்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT