Published : 01 Feb 2018 11:11 AM
Last Updated : 01 Feb 2018 11:11 AM
ஜனனம் மரணத்தின் தொடக்கம். மரணத்தை நோக்கிய பயணமே நம்முடைய வாழ்வு. மரணம் எதன் தொடக்கம் என்று தெரியாததால் அதை நோக்கிய பயணம் மனிதனுக்கு எப்போதும் அச்சமளிக்கக்கூடியதாகவே உள்ளது. மனிதனின் இந்தப் பயம், மனதின் பலம். இந்தப் பயத்தின் பலத்தில் மனம் மனிதனை அவன் வாழ்நாள் முழுவதும் அடிமைப்படுத்தி மகிழ்கிறது.
செவிகளும் விழிகளும் எதைப் பார்க்க வேண்டும், எதைக் கேட்க வேண்டும் என்று தீர்மானிப்பதும் அந்த மனம்தான். அவ்வாறு பார்த்தவற்றுக்கும் கேட்டவற்றுக்கும் வசதியான அர்த்தம் கற்பித்து, அதன் மூலம் நமக்கு பொய்யான நம்பிக்கையளிப்பதும் அதே மனம்தான்.
நம்மை அடிமைப்படுத்தி நம் மீது ஆதிக்கம் செலுத்தும் அந்த அலைபாயும் மனதைக் கொண்டு அலைபாயாமல் இவ்வுலகில் வாழ்வது மனிதனுக்குக் கடினமாக உள்ளது. சாமானியர்கள் மரணத்துக்கு அஞ்சி வாழ்வை நீட்டிக்க இல்லாத வழிகளைத் தேடி அந்தத் தேடலில் தங்கள் வாழ்வைத் தொலைப்பார்கள். ஆனால், தன் மனதை எல்லையற்ற பேரன்பில் தொலைத்து இறைவனிடம் முழுவதும் கரைந்தவர்தான் தாவூத் தாயீ.
நேர்கோட்டில் பயணித்த அம்பு
இவர் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி ஞானிகளில் ஒருவர். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு எப்படி இலக்கை நோக்கி ஒரே நேர்கோட்டில் செல்லுமோ அதைப் போன்று தாவூத் தாயீ வாழ்நாள் முழுவதும் ஆன்மிக வாழ்வை விட்டு துளியும் பிசகாமல் எல்லாம் வல்ல இறைவனை நோக்கிப் பயணித்தார். உலகில் கொட்டிக் கிடந்த இன்பங்களும் மின்னி மயக்கும் செல்வங்களும் மதியை மயக்கும் அழகுப் பெண்களும் செவிகளை நிரப்பும் ஒலி மிகுந்த சொற்களும் கண்களை நிரப்பும் ஜாலம் மிகுந்த உல்லாச வாழ்வும் தாவூத் தாயின் ஆன்மிக வேட்கையை எதிர்கொள்ள முடியாமல் தங்களை அவரிடமிருந்து ஒளித்துக்கொண்டன.
எல்லா ஞானிகளையும் போன்று இவரும் சிறு வயது முதலே சிறந்த அறிவுத் தேடலைக் கொண்டிருந்தார். ஒருநாள் மதிய வேளையில் தாவூத் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது, தெருவில் இதயத்தை உருக்கும் குரலில் ஒரு பெண் பாடிக்கொண்டு சென்றது இவரது செவிகளில் விழுந்தது. தன்னையறியாமலேயே அந்தப் பாடலை உற்றுக் கேட்க ஆரம்பித்தார். “ஒளியையே எப்போதும் பார்க்கும் விழிகளுண்டா? மண்ணில்தான் புதையாத முகமுண்டா? தரையை நனைக்காத கண்ணீர்தான் இங்குண்டா?” என்று அவள் பாடிச் சென்ற வரிகள் தாவூத்தின் மனதை நெகிழச் செய்தன.
அந்தப் பாடல் அவரை ஒரு இனம்புரியாத சோகத்தில் ஆழ்த்தியது. அவரால் அந்தச் சோகத்திலிருந்து மீள முடியவில்லை. அன்று சாயங்காலம் பள்ளியில் இமாம் அபூஹனீஃபா அவர்களைச் சந்தித்து நடந்ததைச் சொன்னார். நிரந்தரமற்ற இந்த உலகைத் தான் வெறுப்பதாகவும் அவரிடம் சொன்னார்.
இமாம் அபூஹனீஃபா சிறிது நேரம் பொறுமை காத்தார். பின் தாவூத்தின் கண்களை உற்றுப் பார்த்து “கொஞ்ச நாட்கள் மனிதர்களைச் சந்திக்காமல் தனியாக வாழ்” என்று அறிவுரை சொன்னார். வீடு திரும்பிய தாவூத், கடவுளைத் தொழுதபடி தனிமையில் மூழ்கினார்.
பட்டை தீட்டப்பட்ட ஞானம்
தனிமையில் நாட்கள் தேய்ந்து வாரங்களாயின. வாரங்கள் கரைந்து மாதங்களாயின. மாதங்கள் மறைந்து வருடங்களாயின. ஆனால், தாவூத் வீட்டின் கதவுகள் திறக்கப்படவேயில்லை. இதைக் கேள்விப்பட்ட அபூஹனீஃபா ஒருநாள் தாவூத்தைப் பார்க்க அவரது வீட்டுக்கு வந்தார். வெட்டாத தலைமுடியிலும் தாடியிலும் முகம் மறைந்து ஆன்மிகப் பிழம்பாகக் காட்சியளித்த தாவூத்தைக் கண்டு அபூஹனீஃபா பெருமிதமடைந்தார். பின் தாவூத்தைப் பார்த்து “தனிமை வாழ்வு உனக்குப் போதும். ஞானிகளிடம் சென்று கேள்வி எதுவும் கேட்காமல் பொறுமையுடன் கேட்டுணர்ந்து உன் ஞானத்தை இனிப் பட்டை தீட்டிக்கொள்” என்று சொல்லிச் சென்றார்.
அதன்படி தாவூத் வீட்டை விட்டு வெளியேறி ஞானிகளின் காலடியில் அமர்ந்து அவர்களது மொழிகளைக் கேட்க ஆரம்பித்தார். அபூஹனீஃபா கூறியதற்கிணங்க, தாவூத் ஒரு வருடம் வாயைத் திறந்து ஒரு கேள்விகூடக் கேட்கவில்லை. ஒரு வருடப் பொறுமை முப்பது வருடக் கடின உழைப்புக்குச் சமமெனப் பின்னாளில் தாவூத் தெரிவித்தார். இனிமேல் கேட்டுத் தெரிவதற்கு எதுவுமில்லை என்ற நிலையில் ஹபீப் ராய் எனும் ஆன்மிக ஞானியைச் சந்தித்தார்.
அவர் தாவூத்தைத் தன் ஆன்மிகப் பயிற்சிகளின்மூலம் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றார். உண்மையான பயிற்சிக்கு முன் அவரிடமிருந்த புத்தகங்கள் எல்லாம் எவ்வளவு பயனற்றவையென அப்போது உணர்ந்தார். அந்தப் புரிதலில் தன்னிடமிருந்த புத்தகங்கள் அனைத்தையும் அங்கு ஓடிய நதியில் விட்டெறிந்தார். மீண்டும் தனிமையில் அமர்ந்து இறுதிவரை கடுமையான துறவு வாழ்வை தாவூத் மேற்கொண்டார்.
ரொட்டியும் தண்ணீரும்
வம்சாவளிச் சொத்தாகக் கிடைத்த இருபது தினார்களின் மூலம் தன் பசியைப் போக்கிக்கொண்டே இறைவனிடம் முழுவதுமாகக் கரையத் தொடங்கினார். அவர் அந்தத் தினார்களை வருடத்துக்கு ஒன்று என்று செலவழித்தார். அவர் தன் நேரத்தை இறைவனைத் தவிர வேறு யாருக்கும் செலவழிக்க விரும்பவில்லை. அவர் உணவு எப்போதும் வெறும் ரொட்டியும் தண்ணீருமாக மட்டுமே இருந்தது. அந்த ரொட்டியைத் தண்ணீரில் நனைத்து சாப்பிடுவதுகூடக் கால விரயம் என்றெண்ணி ரொட்டியைத் தண்ணீரில் கரைத்துக் குடித்தார். அவரது பூர்விக வீடு மிகவும் பெரியது.
அது பல அறைகளைக் கொண்டிருந்தது. பராமரிப்பின்றி அந்த வீட்டின் அறைகள் சிதிலமடைந்து கொண்டிருந்தன. ஆனால், தாவூத்துக்கு அதையெல்லாம் கவனிக்க நேரமுமில்லை, மனமுமில்லை. அவர் வசிக்கும் அறை முழுவதும் சிதிலமடைந்தால் அவர் மற்றோர் அறைக்குச் செல்வார்; இவ்வாறு தாவூத் ஓர் அறையிலிருந்து மற்றொன்றுக்குக் கடைசிவரை மாறிக்கொண்டேயிருந்தார்.
“தலையைக் குனிந்து கடவுளிடம் மண்டியிட்டு இரங்கி வேண்டுவது மட்டும் போதுமா? போதவே போதாது. பரிசுத்த இதயமும் நமக்கு வேண்டும்” என்று சொன்னவர் தன் வாழ்நாள் முழுவதும் பரிசுத்த இதயத்துடன்தான் வாழ்ந்தார். தனிமையில் இவ்வளவு கடினமான துறவறத்தை ஏன் கடைப்பிடிக்கிறீர்கள் என்று ஒருவர் கேட்டார். அதற்கு “இளையோருக்கு அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இல்லை. எனக்கு நல்வழி காட்டும் திறன் என் வயதினருக்கு இல்லை. என்னைக் கண்டிக்கும் மனம் என்னைவிட வயதில் மூத்தவர்களுக்கு இல்லை.
எனவேதான் நான் தனிமையில் வாழ்கிறேன். என்னை இதில் நான் வருத்திக்கொள்ளவில்லை. நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை இந்த வாழ்வு எனக்கு ஒரு நோன்பு. இந்த நோன்பில் நான் உணவுக்குப் பதில் உலக வாழ்வைத் துறந்துள்ளேன். நோன்பைத் திறக்கும்போது என்னவருள் என்னை இழந்திருப்பேன் ” என்று பதிலுரைத்தார்.
உங்களுக்குப் பரம்பரைச் சொத்தின் மூலம் கிடைத்த பணத்தை இல்லாதோருடன் பகிராமல் நீங்களே வைத்துக்கொள்வது நியாயம்தானா என்று ஒருமுறை அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “சாப்பிடுவதற்கே எனக்கு நேரமில்லை. இந்த நிலையில் என்னிடம் இருப்பதைக் கொடுத்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் நான் யாசித்துத்தான் உண்ண வேண்டியிருக்கும். அந்த யாசிப்பு என் நேரத்தை மேலும் வீணாக்கி என் நிம்மதியை முற்றிலும் குலைக்கும். எனவேதான், நான் அந்தப் பணத்தைத் தானம் செய்யவில்லை. என்னிடமிருக்கும் அந்தப் பணம் முற்றிலும் தீரும் நாளில் என்னவர் என்னை அழைத்துக்கொள்வார்” என்று சொன்னார்.
அந்த நம்பிக்கையைப் பொய்ப்பிக்க விரும்பாத அவருடைய எஜமானாரும் அவ்வாறே அவர் விருப்பத்தை 782-ம் வருடம் நிறைவேற்றினார்.
(ஞானிகள் தொடர்வார்கள்..)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT