Published : 18 Jan 2024 06:20 AM
Last Updated : 18 Jan 2024 06:20 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கூழமந்தலில் உள்ள நட்சத்திர விநாயகர் கோயிலில் 108 கோ பூஜை விழா நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில் நட்சத்திர விநாயகர் கோயில் உள்ளது.
இங்கு 27 நட்சத்திர தேவதைகளுக்கு கற்சிலைகள் அமைக்கப்பட்டு அதற்குரிய நட்சத்திர விருட்ச மரங்களும் அமைந்துள்ளன. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் விழா காலங்களில் 108 கோ பூஜை நடைபெறும்.
உலக நன்மை கருதியும், குடும்ப நன்மைக்காகவும், இல்லத்தில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் வகையில் மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டி 108 கோ பூஜை விழா கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
அதிகாலையில் விநாயகர், வள்ளி - தெய்வானை சமேத சிவசுப்பிரமணியர், 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், ருத்ராட்ச லிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த விழாவில் பெண்கள் குடும்பத்துடன் பங்கேற்று கோ பூஜை செய்து வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து அரசு - வேம்பு திருக்கல்யாணம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT