Published : 16 Jan 2024 04:02 PM
Last Updated : 16 Jan 2024 04:02 PM
மதுரை: மதுரை அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச பெருந்திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மதுரை சோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச பெருந்திருவிழா ஜனவரி 16 முதல் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு ஆஸ்தானத்திலிருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை, வள்ளியுடன் புறப்பாடாகி காலையில் 10.40 மணியளவில் தங்கக் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்க கொடிமரத்துக்கு தீப, தூப ஆராதனைக்குப் பின் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
இதில் கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாலையில் யாகசாலை பூஜைகள் முடிந்து மாலையில் பூத வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் யாக சாலை பூஜைகள் நடைபெறும். காலையில் சிம்மா சனத்திலும், மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். அதேபோல், 2-ம்நாள் அன்னவாகனம், 3-ம் நாள் காமதேனு வாகனம், 4-ம் நாள் ஆட்டுக் கிடா வாகனம், 5-ம் நாள் பூச்சப்பரம், 6-ம் நாள் யானை வாகனம், 7-ம் நாள் பல்லக்கு வாகனம், 8-ம் நாள் குதிரை வாகனங்களில் புறப்பாடு நடைபெறும்.
முக்கிய விழா தங்கத் தேரோட்டம் (9-ம் நாள் ) ஜனவரி 24ம் தேதி நடைபெறும். மாலையில் வெள்ளி மயில்வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். 10-ம் நாள் தைப்பூசத்தன்று காலை 10.30 மணியளவில் தீர்த்தவாரி, தைப் பூச மகா அபிசேகம் நடைபெறும். மாலையில் 4.30 கொடியிறக்கம், தீபாராதனையுடன் முடிந்து சுவாமி இருப்பிடம் சேருதலுடன் திருவிழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி தலைமையில் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT