Published : 15 Jan 2024 09:04 AM
Last Updated : 15 Jan 2024 09:04 AM

ஓசூர் குழந்தை இயேசு தேவாலயத்தில் சமத்துவ பொங்கல்

ஓசூர் முனீஸ்வரர் நகர் புனித தெரசாள் குழந்தை இயேசு தேவாலயத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில், மண் பானையில் பொங்கலிட்டு திருப்பலி பூஜைகள் நடந்தன.

ஓசூர்: ஓசூர் முனீஸ்வரர் நகர் புனித தெரசாள் குழந்தை இயேசு தேவாலயத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

இதையொட்டி, தேவாலய வளாகத்தில் வண்ணக் கோலங்கள் இட்டும், புது பானைக்கு அலங்காரம் செய்தும், அடுப்புகளை மூட்டி கரும்பு தோரணம் கட்டி, பொங்கல் வைத்தனர். பின்னர் பொங்கல் பனையை தேவாலயத்தில் இயேசு பிரானின் முன்பு வைத்து திருப்பலி பூஜைகள் நடந்தன. இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என பலரும் பங்கேற்றுக் கும்மி ஆட்டம் ஆடி பொங்கலைக் கொண்டாடி மகிழ்ந்தனர். இதேபோல, ஓசூர் மாநகராட்சி வளாகத்தில் மேயர் சத்யா தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. துணை மேயர் ஆனந்தைய்யா முன்னிலை வகித்தார்.

ஆர்சி தேவாலய பங்கு தந்தை மற்றும் இஸ்லாமியப் பெரியவர்கள் முன்னிலையில் பொங்கல் வைத்து படையலிட்டு, பசுமாடுகளுக்குப் பூஜை செய்து பொங்கல் மற்றும் பழங்கள் ஊட்டினர். தொடர்ந்து, தூய்மைப் பணி யாளர்களுக்குப் புத்தாடை வழங்கப்பட்டது. பொதுச் சுகாதாரக் குழு தலைவர் மாதேஸ்வரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட கலந்து கொண்டனர். ஓசூர் நஞ்சுண்டேஸ்வரர் நகரில் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் துரை தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

இதையொட்டி, பெண்களுக்கு கோலப்போட்டி, கும்மி பாட்டு, இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதேபோல, கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் குமார் தலைமையில் சமத்துவ பொங்கல் நடைபெற்றது. இதில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x