Published : 15 Jan 2024 05:54 AM
Last Updated : 15 Jan 2024 05:54 AM
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கு அப்பறைகொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!
அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற முகத்தை உடைய ஆயர்குலப் பெண்கள் பாவை நோன்பு இருந்து வணங்கினர். இந்த விபரங்களை, ஸ்ரீவில்லிப்புத்தூரில் பெரியாழ்வார் மகளாக அவதரித்த, கோதை நாச்சியார், முப்பது நாளும் முப்பது பாடல்களாகப் பாடி ஸ்ரீமன் நாராயணனுக்கு பாமாலை தொடுத்திருக்கிறாள். சூடிக் கொடுத்த சுடர்க்கோடி என்றும், ஆண்டாள் என்றும் அவளே போற்றப்படுகிறாள்.
திருப்பாவை என்று அழைக்கப்படும் இந்த 30 பாடல்களைப் படிப்பவர்கள், கேட்பவர்கள், பாடுபவர்கள் அனைவரும். உயர்ந்த தோள்களை உடையவனும், தாமரைக் கண்களை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் அருளுடன் எங்கு சென்றாலும், செல்வச் செழிப்பு பெற்று, இப்பிறவியில் மட்டுமல்லாது, எப்பிறவியிலும், இன்பமுடன் வாழ்வர் என்று கூறப்படுகிறது.
பாவை நோன்பைக் கடைபிடிக்கும் பெண்கள், ஒவ்வொரு தோழியராக எழுப்பிக் கொண்டு, அரண்மனை வாயிற்காப்பான், நந்தகோபன், யசோதை, பலராமன், நப்பின்னை என அனைவரை யும்எழுப்பி, இறைவனையும் அவன் புகழ்பாடி எழுப்பி, பரிசுகளோடு அவன் அருளையும் பெற்றதாக கோதை பாடுகிறாள். நிறைவுப் பாசுரத்தில் தனது தந்தைப் பெயரைக் குறிப்பிட்டு அவருக்கு நன்றி தெரிவிக்கிறாள் ஆண்டாள். தினமும் காலை 4-30 மணிக்கு எழுந்து நீராடி கோயிலுக்குச் சென்றோ அல்லது வீட்டில் இருந்தபடியோ திருப்பாவைப் பாடல்களைப் பாடினால் அனைத்து செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment