Published : 14 Jan 2024 06:41 AM
Last Updated : 14 Jan 2024 06:41 AM
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துஉன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்;
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!
‘கண்ணா!ஆயர்குலப் பெண்களான நாங்கள், அதிகாலையில் எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, உனது தாமரை போன்ற திருவடிகளை வணங்குகிறோம். சிறுபிள்ளைகளின் சிறு விரதம்தானே என்று எங்களை அலட்சியம் செய்துவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக நாங்கள் இந்த விரதத்தைக் கடைபிடிக்கவில்லை. உனக்கு சேவை செய்யவே நாங்கள் விரும்புகிறோம். இப்பிறவியுடன் நமது பந்தம் முடிந்து விடாது. இனிவரும் பிறவிகளிலும் நாங்கள் உனக்கு சேவை செய்ய, நீ அருள்புரிய வேண்டும்’ என்று ஆயர்குலத்தைச் சேர்ந்த பெண்கள் கண்ணனை வேண்டுகின்றனர்.
இறைவனுக்கு ஆட்படுதல் என்பது வைணவ சம்பிரதாயத்தில் சரணாகதி என்று கூறப்படுகிறது. இறைவனுக்கு அடி பணிந்து தொண்டு புரிதல் என்பது அடியார்களின் கடமை ஆகும். இறைவனின் பங்கு தனது கருணையால் அடியாரை அனைத்துவித இன்னல்களில் இருந்தும் காப்பாற்றுதல் ஆகும். ஸ்ரீராமாயணத்தில் ராமபிரானின் சகோதரர்களாக வந்து சேர்ந்த லட்சுமணர், பரதன், சத்ருக்னன் ஆகியோர், சரணாகதி செய்தே அந்தப் பேறு பெற்றனர். அதுபோல தங்களை கண்ணனின் அடியார்களாக நினைத்து, ஆயர்குலப் பெண்கள் அவனுக்கு சேவை செய்து மகிழ்கின்றனர்.
கண்ணனை பரம்பொருள் என்பதை உணர்ந்த ஆயர்குலப் பெண்கள், எந்தக் காலத்திலும் அவனுக்கு அடியாராக பிறப்பெடுக்க வேண்டும் என்று வேண்டுகின்றனர். தங்கள் மனதில் எழும் சிற்றாசைகளை, நீக்கி, அதை பக்தியாக மாற்ற கேட்டுக் கொள்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT