Published : 10 Jan 2024 07:15 AM
Last Updated : 10 Jan 2024 07:15 AM
பொன்னேரி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜன. 22-ம் தேதி ஆரணி ராமர் கோயிலில் சீதா ராம கல்யாண மஹோத்ஸவம் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இந்த கல்யாண மஹோத்ஸவத்துக்காக, திருமண பத்திரிகை வடிவில் அழைப்பிதழ், பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜன. 22-ம் தேதி நடைபெற உள்ளது. வெகுவிமரிசையாக நடைபெற உள்ள இந்த விழாவுக்கு, ராமஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அரசியல், திரைமற்றும் விளையாட்டுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் விநியோகம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே ஆரணி- பஜார் தெருவில் உள்ள சுமார் 126 ஆண்டுகள் பழமையான ராமர் கோயிலில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கும்பாபிஷேக நாளான ஜன. 22-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சீதா ராம கல்யாண மஹோத்ஸவத்தை வெகுவிமரிசையாக நடத்த கோயில் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த சீதா ராம கல்யாண மஹோத்ஸவத்துக்காக திருமண பத்திரிகை வடிவில் அழைப்பிதழ் அச்சடித்து, கோயில் நிர்வாகிகள் பக்தர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.
‘மஹாராஜராஜ ஸ்ரீஜனக மஹாராஜா - சுனயனாவின் திவ்ய குமாரத்தி செளபாக்கியவதி ஸ்ரீசீதா தேவிக்கும் மஹாராஜராஜ ஸ்ரீ தசரத மஹாராஜா - கெளசல்யா தேவியின் குமாரனுமான சீரஞ்சிவி ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கும் சீதா ராம கல்யாண மஹோத்ஸவம் நடைபெற உள்ளது” என்ற வாசகங்களுடன் பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தக் கூடிய வகையில் இந்த அழைப்பிதழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT