Published : 10 Jan 2024 06:18 AM
Last Updated : 10 Jan 2024 06:18 AM

தெய்வாம்சம் பொருந்திய நூல் ‘ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ஹிதை’ - மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி பெருமிதம்

சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள். | படங்கள்: ம.பிரபு |

சென்னை: பரனூர் மஹாத்மா ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகளின் ஸ்ரீ வைஷ்ணவ சம்ஹிதை நூல் தொடர்பான தமிழ் சொற்பொழிவை மஹாரண்யம் ஸ்ரீ முரளிதர சுவாமிகள் நேற்று முன்தினம் சென்னை, நாரத கான சபாவில் தொடங்கினார். குளோபல் ஆர்கனைசேஷன் ஆஃப் டிவைனிடி அமைப்பின் ஆதரவில் ஸ்ரீ வைஷ்ணவ சம்ஹிதையின் தமிழ் சொற்பொழிவு ஜன. 8 முதல் ஜன.14 வரை மாலை 6-30 மணி முதல் 8-30 மணி வரை நாரத கான சபாவில் முரளிதர சுவாமிகள் நிகழ்த்துகிறார்.

நிகழ்வின் தொடக்க நாளில் முரளிதர சுவாமிகள் நிகழ்த்திய சொற்பொழிவில் கூறியதாவது: எத்தனையோ மகான்கள் இந்தப் பூமியில் அவதரித்திருக்கின்றனர். இறைவனின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் படைப்புகளை கவிதைகளாகவும் கிரந்தங்களாகவும் படைத்திருக்கின்றனர். ஆனால் அப்படி அருளாளர்களால் படைக்கப்படும் படைப்புகளை அந்த காலத்தில் அவர்களின்சமகாலத்தில் வாழ்ந்த அருளாளர்களும் அரசர்களும் படைப்பாளிகளும் ஏற்றுக்கொண்டதில்லை.

கிணற்றில் போடப்பட்ட புத்தகம்: எல்லோராலும் ஸ்ரீ அண்ணா என்று கொண்டாடப்படும் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள் அருளியிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவ சம்ஹிதைநூலும் தெய்வாம்சம் பொருந்தியதுதான். இந்த சம்ஹிதை பல ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்ரீ அண்ணாவால் சாதாரண நோட்டுப் புத்தகத்தில் பேனாவால் எழுதப்பட்டிருந்தது.

ஒருநாள், தான் எழுதிய இந்த சம்ஹிதை நூலை, பரனூர் பக்த கோலாஹலன் சந்நிதானத்தில் இருக்கும் ஒரு நந்தவனத்தில் இருக்கும் கிணற்றில் போடத் துணிந்தார் ஸ்ரீ அண்ணா. அவருக்கு அருகிலிருந்த நாகராஜ சாஸ்திரிகள் எவ்வளவு தடுத்தும் கேளாமல் ஸ்ரீ அண்ணா சம்ஹிதை எழுதப்பட்ட நோட்டுப் புத்தகத்தை அந்தக் கிணற்றில் போட்டுவிட்டார்.

அப்படியும் இரண்டு நாட்கள் தொடர்ந்து, நாகராஜ சாஸ்திரிகள் கிணற்றிலிருந்து அந்த சம்ஹிதையை எடுப்பதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து ஸ்ரீ அண்ணாவிடம் வேண்டிக் கொண்டே இருந்தார். மூன்றாவது நாளில் ஸ்ரீ அண்ணா, ‘‘சரி, வேண்டுமானால் எடுத்துக் கொள்’’ என்று அனுமதி கொடுத்திருக்கிறார்.

உடனே நாகராஜ சாஸ்திரிகள் கிணற்றிலிருந்து அந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்திருக்கிறார். மூன்று நாட்கள் கிணற்றில் இருந்தாலும், அந்த நோட்டுப் புத்தகம் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்தது. இதன்மூலம் கிருஷ்ண பிரேமி அருளிய ஸ்ரீ வைஷ்ணவ சம்ஹிதை நூலும் தெய்வாம்சம் வாய்ந்தது என்பது புரிந்தது.

ஆதி சங்கரர், போதேந்திராள், யதிராஜர், ஆனந்ததீர்த்தர், சைதன்யர் உள்ளிட்ட பல அருளாளர்களின் வாழ்வில் நடந்த முக்கியமான சம்பவத்தை ஸ்ரீ வைஷ்ணவ சம்ஹிதையில் ஸ்ரீ அண்ணா அருமையாக முத்தாய்ப்பாக காட்டியிருப்பார். அதுதான் இந்த சம்ஹிதையின் சிறப்பு. இவ்வாறு அவர் தன் சொற் பொழிவில் குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x