Published : 07 Jan 2024 04:08 AM
Last Updated : 07 Jan 2024 04:08 AM

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை கோவையில் தொடக்கம்

கோவை: மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் நேற்று முன்தினம் ஆதியோகி ரத யாத்திரை தொடங்கியது.

கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவரத்திரி விழா ஆண்டு தோறும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மகா சிவராத்திரி விழாவுக்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான யாத்திரை கோவை ஈஷா வளாகத்தில், ஆதியோகி முன்பிருந்து நேற்று முன்தினம் தொடங்கியது.

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ரத யாத்திரையை தொடங்கி வைத்து பேசும் போது, ‘‘இறைவனை வழிபடுவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று நாம் இறைவனை தேடிச் சென்று வணங்குவது. மற்றொன்று இறைவன் நமக்காக வீதிகள்தோறும் வந்து நமக்கு அருள்பாலிப்பது. அந்த வகையில் இந்த ஆதியோகி ரத யாத்திரை அடியார்களுக்கு அருள் புரியும் தன்மையோடு, தமிழகம் முழுவதும் வலம்வர இருக்கிறது.

சிவ பெருமானுக்கு உரிய மகா சிவராத்திரியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த ரத யாத்திரை அமைய உள்ளது. சிவகண வாத்தியம், திருமுறை பன்னிசை போற்றி வழிபாடு உள்ளிட்ட நிகழ்வுகளோடு வலம்வர உள்ள இந்த ரத யாத்திரையை அடியார்கள் பயன்படுத்தி சிவனருள் பெற வேண்டும்’’ என்றார்.

ஆதியோகி திருமேனியுடன் கூடிய 4 ரதங்கள், தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் கி.மீ தூரம் வரை பயணிக்க உள்ளன. ஒவ்வொரு ரதமும் ஒவ்வொரு திசையில் பயணித்து, மகா சிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடையும் என ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x