Published : 03 Jan 2024 05:08 AM
Last Updated : 03 Jan 2024 05:08 AM

ஸ்ரீரங்கம் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம்: பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த நம்பெருமாள்.

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நேற்று நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா டிச.12-ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு டிச. 23-ம் தேதி நடைபெற்றது. பின்னர் ராப்பத்து உற்சவம் தொடங்கி, நேற்று நிறைவடைந்தது.

இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் நம்மாழ்வார் மோட்சம் நடைபெற்றது. சொர்க்கவாசலுக்கு செல்லும் வழியில் நம்மாழ்வார் வெள்ளை ஆடை உடுத்தி, பன்னிரு நாமமும், துளசி மாலையும் அணிந்து காட்சியளித்தார். பின்னர் நம்மாழ்வாரை அர்ச்சகர்கள் இருவர் கொண்டுசென்று, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளியிருந்த நம்பெருமாளின் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படும்படி சரணாகதியாக சமர்ப்பித்தனர். பின்னர் நம்மாழ்வாரை துளசியால் பல்வேறு வேதங்கள் சொல்லியபடி மூடினர். தொடர்ந்துநம்மாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை மெதுவாகஅகற்றினர். இதையடுத்து, நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூரி திலகமும், துளசிமாலையும் அணிவிக்கப்பட்டது. பின்னர், நம்பெருமாள் முன் நம்மாழ்வாரைக் காண்பித்து, நம்மாழ்வார் மோட்சம் அடைந்தாக அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

பின்னர், உபயக்காரர் மரியாதையுடன் பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளித்தார். காலை 9.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயற்பா பிரபந்தம் தொடங்கியது. இரவு 9 மணி முதல் இன்று (ஜன. 3) அதிகாலை 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெற்றது. அதிகாலை 4 மணி முதல் 5 மணிவரை சாற்றுமறை நடைபெற்றது. இத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x