Published : 02 Jan 2024 05:43 AM
Last Updated : 02 Jan 2024 05:43 AM
அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்,
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதா! அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா, பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!
கோதை நாச்சியாரும் அவளது தோழியரும் ஒவ்வொரு வீடாகச் சென்று தங்கள் தோழியரை உறக்கத்தில் இருந்து எழுப்பி, அழைத்துக் கொண்டு மார்கழி நீராட கிளம்புகின்றனர். நந்தகோபனின் மாளிகைக்கு வந்து, நுழைவாயிலில் நின்று கொண்டு தங்களை உள்ளே அனுமதிக்குமாறு வாயிற்காப்போனிடம் வேண்டுகின்றனர்.
வாயிற்காப்போனும் அவர்களை உள்ளே அனுமதிக்கிறார். ஆண்டாள் உள்ளிட்ட தோழியர், நந்தகோபன், யசோதை, கண்ணன், பலராமன் ஆகியோரை எழுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் மாளிகைக்குள் நுழைகின்றனர். ஆயர்பாடிகளின் தலைவன் என்பதால் நந்தகோபனுக்கு பல பொறுப்புகள் இருக்கும். உணவு, உடை, இருப்பிடம், தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவை அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வதில் உறுதியாக இருப்பவர்.
தங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் தலைவ னுக்கு நன்றி தெரிவித்து அவரை எழுப்பிய பின்னர் யசோதையை 'எம்பெருமாட்டி' என்று அழைத்து துயில் எழுப்புகின்றனர்.
வாமன அவதாரத்தின்போது முன்றடி நிலத்தை மகாபலியிடம் தானமாகப் பெற்று வானளவு உயர்ந்து, வானத்தை ஓரடியாகவும் பூமியை ஓரடியாகவும் அளந்த தேவர் தலைவனை எழுப்ப முற்படுகின்றனர்.
கண்ணனை எழுப்பும்போது, பலராமனையும் எழுப்பி, "வீரனான நீயும், உன் தம்பி கண்ணனும் உடனே உறக்கத்தில் இருந்து எழ வேண்டும்' என்று கூறுகின்றனர். இப்பாசுரத்தில் ஒரு தலைவன், நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை அறிவுறுத்தப்படுகிறது. தாயின் அன்பு, கண்ணனின் சிறப்பு, பலராமனின் வீரம் போன்றவை விளக்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT