Published : 02 Jan 2024 06:33 AM
Last Updated : 02 Jan 2024 06:33 AM
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கடந்த டிசம்பர் 23-ம் தேதிஅதிகாலை 1.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் தரிசன பாக்கியத்தை பக்தர்களுக்கு வழங்குவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. அதன்படி நேற்று ஜனவரி 1-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் சொர்க்க வாசல் தரிசனம் செய்ய அனுமதித்தது.
இதனால் கடந்த 5 நாட்களுக்கு முன் இலவச சர்வ தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தப்பட்டது.இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு இலவச சர்வ தரிசன டோக்கன் விநியோகம் மீண்டும் தொடங்கியது. திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி சத்திரம்,விஷ்ணு நிவாசம், மாதவம், அலிபிரிஅருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 4 இடங்களில் ஆதார் அட்டை உள்ள பக்தர்களுக்கு இந்த டோக்கன் வழங்கும்பணி தொடங்கியது. இன்று காலைடோக்கன் பெற்ற பக்தர்கள் நண்பகல் 12 மணியில் இருந்துசுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.
புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் முழுவதும் நேற்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரவில் மின் அலங்காரத்தில் திருமலையே ஜொலித்தது. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி தம்பதி, தெலங்கானா துணை முதல்வர் பட்டி விக்ரமார்க்கா, நடிகர் சுமன் உள்ளிட்டோர் நேற்று திருமலையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள அனைத்து கோயில்களிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT