Last Updated : 29 Dec, 2023 06:19 AM

 

Published : 29 Dec 2023 06:19 AM
Last Updated : 29 Dec 2023 06:19 AM

ஆண்டாள் திருப்பாவை 13 | இறையின்பம் பருக வேண்டும்..!

புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;
வெள்ளி எழுந்து, வியாழ முறங்கிற்று;
புள்ளும் சிலம்பினகாண்! போது அரிக்கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,
பள்ளிக் கிடத்தியோ? பாவாய் நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்!

ஸ்ரீமன் நாராயணன் எடுத்த அவதாரங்களின் பெருமைகள் இப்பாசுரத்தில் விளக்கப்படுகின்றன. கண்ணனை அழிக்க நினைத்த கம்சன், பகாசுரன் என்ற அரக்கனை ஏவினான். பகாசுரன் கொக்கின் வடிவம் எடுத்து, யமுனை நதிக்கரைக்குச் சென்று அங்கிருந்த கண்ணனை விழுங்கினான். கொக்கின் நெஞ்சத்தில் இருந்த கண்ணன், நெருப்பைப் போல் எரித்ததால். அதைப் பொறுக்க முடியாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து தன் அலகால் கொத்தியது. கண்ணன் கொக்கின் வாய் அலகுகளை தன் கைகளால் பற்றி இரண்டாக கிழித்து கொக்கை (பகாசுரன்) வீழ்த்தினார்.

இலங்கை அரசன் ராவணன் சீதாபிராட்டியைக் கவர்ந்து சென்றதால், அவனை வதம் செய்து சீதையை மீட்டவர் ராம பிரான். ஸ்ரீமன் நாராயணனின் இத்தகைய பெருமைகளைப் பாடிய வண்ணம், நம் தோழியர் அனைவரும் பாவை விரதம் இருக்கும் இடத்துக்குச் சென்றுவிட்டனர்.

செவ்வரி படர்ந்துள்ள அழகிய விழிகளை உடைய பெண்ணே! கீழ்வானத்தில் வெள்ளி முளைத்துவிட்டது. வியாழன் மறைந்து விட்டது. அதிகாலைவேளையை உணர்த்தும் விதமாக பறவைகள் பாடுகின்றன. உடல் நடுங்கும்படி குளிர்ந்த நீரில் நீச்சலடித்து நீராட வராமல் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாய்.

கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே! மார்கழியில் அவனை நினைப்பது மிகவும் சிறப்பானதாகும். எனவே உறக்கம் என்ற கள்ளத்தனத்தை தவிர்த்து எங்களுடன் நீராடக் கிளம்ப வேண்டும், இறையின்பம் பருக வேண்டும் என்று தன் தோழியை அழைக்கிறாள் ஆண்டாள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x