Last Updated : 28 Dec, 2023 06:01 AM

 

Published : 28 Dec 2023 06:01 AM
Last Updated : 28 Dec 2023 06:01 AM

ஆண்டாள் திருப்பாவை 12 | ராமபிரானின் அருள் பெறுவோம்..!

கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்!

ஆயர்பாடியில் வசிக்கும் மக்களின் செல்வ வளத்தை இப்பாசுரம் உணர்த்துகிறது.அதிகாலை வேளையில் பொதுவாக வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிடுவது வழக்கம். தண்ணீர் அதிகமாகிவிட்டால் அவ்விடமே செறாகி விடும். எருமைகள் பால் சொரிந்து, ஆண்டாளின் தோழி இல்லத்து வாசல் சேறாகி விட்டது. அவளது வீட்டுக்குள் நுழைய முடியாமல், தோழிகள் ஒரு கட்டையைப் பிடித்துத் தொங்கியபடி அவளை எழுப்புகின்றனர்.

பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள், தங்கள் மடியில் சொரியும் பாலை சிந்தியபடியே அங்கும் இங்கும் செல்கின்றன. கொட்டும் பனியையும் பொருட் படுத்தாது,நாங்கள், உன் வீட்டு வாசலில் காத்து நிற்கிறோம் ராமபிரான் அவதாரம் எடுத்த கோமானாகிய ஸ்ரீமன் நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம்.

செல்வச் செழிப்பு மிக்க ஆயனின் சகோதரியே! ஆயர்பாடியில் அனைவரும் எழுந்துவிட்ட பிறகும் உனக்கு இந்த பெருந்தூக்கம் அழகல்ல என்று கூறி தன் தோழியை எழுப்புகிறாள் கோதை நாச்சியார். கீழே பால் வெள்ளத்தால் குளிர்ச்சி, மேலே பனியின் குளிர்ச்சி - இதுபோன்ற பல இடர்பாடுகளையும் தாண்டி இறைவனை அடைய முயற்சி மேற்கொள்ள வேண்டும். நம் அனைவரையும் காத்தருள காத்திருக்கும் இறைவனை, நாம் காக்க வைக்கக் கூடாது. அது நமக்கு அழகல்ல. பாவை நோன்பு நெறியைக் கடைபிடிக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து, நீராடிவிட்டு, இறைவனின் புகழைப் பாட வேண்டும் என்று இப்பாசுரம் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x