Published : 28 Dec 2023 05:38 AM
Last Updated : 28 Dec 2023 05:38 AM

சிதம்பரம், உத்தரகோசமங்கை நடராஜர் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: `சிவ சிவ' முழக்கத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று திரண்டிருந்த பக்தர்களில் ஒரு பகுதியினர். (அடுத்த படம்) உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் நேற்று சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த மரகத நடராஜர்.

கடலூர்/ராமநாதபுரம்: சிதம்பரம், உத்தரகோசமங்கையில் உள்ள நடராஜர் கோயில்களில் நேற்று நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

‘பூலோக கைலாயம்’ என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடைபெறும். நடப்பாண்டுவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று அதிகாலை ஆயிரங்கால் மண்டப முகப்பில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சித்சபையில் ரகசியபூஜை, பஞ்சமூர்த்தி வீதியுலா நடைபெற்றது. மாலை ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் பக்தர்களுக்கு தரிசனம் தந்தவாறு, மேளதாளத்துடன் சிவவாத்தியங்கள் முழங்க நடனமாடியபடி சித்சபைக்குச் சென்றனர். அப்போது, கோயிலில் கூடியிருந்த ஆயிரக்காணக்கான பக்தர்கள் ‘சிவ சிவ’ என்று பக்திப் பரவசத்துடன் முழக்கம் எழுப்பி சுவாமியை தரிசனம் செய்தனர்.

விழாவில் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (டிச. 28) பஞ்சமூர்த்தி முத்துப் பல்லக்கு வீதியுலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர். திருவிழாவையொட்டி சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், சிதம்பரம் நகரின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

மரகத நடராஜர்: ராமநாதபுரம் மாவட்டம்உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி உடனுறை மங்களேஸ்வரி கோயிலில் உள்ள 6 அடி உயர, ஒற்றைப் பச்சை மரகதக் கல்லால் உருவான நடராஜர் சிலைக்கு ஆண்டு முழுவதும் சந்தனம் பூசி பாதுகாக்கப்படும்.

ஆண்டுக்கு ஒருமுறை ஆருத்ரா தரிசன விழாவுக்காக முந்தைய நாள் சந்தனக்காப்பு களைந்து அபிஷேகம் செய்யப்படும். நடப்பாண்டு ஆருத்ரா தரிசன விழா கடந்த 18-ம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மரகத நடராஜர் திருமேனி மீது பூசப்பட்ட சந்தனக்காப்பு களைந்து, 32 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு தேவாரஇசை, பண்ணிசை, கூத்தர் பெருமான் கல் தேர் மண்டபம் எழுந்தருளல், மரகத நடராஜருக்கு ஆருத்ராமகா அபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நள்ளிரவில் தரிசனம் நிறுத்தப்பட்டு, நடராஜர்சிலைக்கு புதிதாக சந்தனக்காப்பு பூசப்பட்டது. நேற்று அதிகாலை அருணோதய காலத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடராஜரை தரிசித்தனர்.

இரவு மாணிக்க வாசக சுவாமிகளுக்கு காட்சி கொடுத்த பின்னர் பஞ்சமூர்த்தி புறப்பாடுநிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, வெள்ளி ரிஷப சேவையுடன் ஆருத்ரா தரிசன விழா நிறைவடைந்தது. இதையொட்டி, ராமநாதபுரம் எஸ்.பி. தங்கதுரை தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x