Published : 27 Dec 2023 08:09 PM
Last Updated : 27 Dec 2023 08:09 PM
குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வழிபாடு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்றிரவு நடை சாத்தப்பட்டு, மகர பூஜைக்காக வரும் இம்மாதம் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல கால பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம் தேதி மாலை நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை சுவாமி தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 40 நாட்களில் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், முக்கிய நிகழ்வான மண்டல பூஜை வழிபாடு இன்று காலை 11 மணிக்கு தந்திரி மகேஷ்மோகனரு தலைமையில் நடைபெற்றது. கலசாபிஷேகம், களபாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்பு 450 பவுன் தங்க அங்கி சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு மங்கல இசை முழங்க தீபாராதனை காட்டப்பட்டது.
இந்தச் சிறப்பு பூஜையில் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடலுடன் நடை சாத்தப்பட உள்ளது. மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் வரும் 30-ம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்படும்.
ஜன.15-ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெறும். தொடர்ந்து 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். 21-ம் தேதி பந்தளம் ராஜ குடும்பத்தினரின் சுவாமி தரிசனத்துக்குப் பிறகு நடை சாத்தப்படும்.
மண்டல பூஜையில் கலந்து கொண்ட நாகலாந்து ஆளுநர் இல..கணேசனுக்கு சிறப்பு பிரசாதம் அளிக்கப்பட்டது. அவருடன் அவரது சகோதரர் இல.கோபாலன், மைத்துனர் சந்திரகோபாலன், திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் உட்பட பலரும் சுவாமி தரிசனம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT