Published : 27 Dec 2023 07:13 AM
Last Updated : 27 Dec 2023 07:13 AM

மார்கழி மாத ஆருத்ரா நிகழ்வு: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

கடலூர்: உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மார்கழி ஆருத்ரா தரிசன விழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நேற்று காலை 6மணியளவில் மேளதாளம் முழங்க,வேத மந்திரங்கள் ஓத, ஸ்ரீ நடராஜர்- ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ சண்டிகேசர் ஆகிய உற்சவ மூர்த்திகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள்தேர்களின் வடம் பிடித்து ‘சிவ சிவ’ என்ற பக்திமுழக்கத்துடன் தேர்களை இழுத்து சென்றனர். கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக நடைபெற்ற தேரோட்டம் நேற்று இரவு கீழவீதியில் நிலையை அடைந்தது. இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபம் முன்புறமுள்ள முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகளுக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.

ஆருத்ரா தரிசனம் இன்று (டிச.27) நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று அதிகாலை 4 மணிமுதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடைபெறும். பஞ்சமூர்த்தி வீதியுலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபை பிரவேசமும் நடைபெறுகிறது. தொடர்ந்து, நாளை பஞ்சமூர்த்தி முத்துப் பல்லக்கு வீதியுலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில்பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். திருவிழாவையொட்டி சிதம்பரம் நகரில் பல்வேறு இடங்களில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x