Published : 25 Dec 2023 06:49 PM
Last Updated : 25 Dec 2023 06:49 PM
என் வாழ்நாளின் அற்புதப் பயணமாக அமைந்தது சபரிமலை ஐயப்ப யாத்திரை.
48 நாட்கள் பிரம்மச்சர்யம் விரதம் இருந்து முழு நம்பிக்கையோடு குரு வழிகாட்டுதலுடன் பெருவழிப் பாதையில் மட்டுமே நடந்து சென்று ஒருமுறை ஐயப்பனைப் பார்த்து தரிசித்து வாருங்கள். அது ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத அனுபவமாகவே இருக்கும்.
நான் சபரிமலைக்குப் போய்வந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும், இந்த நிமிடம் வரைக்கும் நேற்று நடந்ததுபோல, மலைக்கு மிகவும் பக்கத்தில் இருக்கிறது போன்றதான ஓர் அதீத மன உணர்வு இருந்துகொண்டே இருக்கிறது. தூங்கிக் கொண்டிருக்கும்போதுகூட அலையலையாக வந்துகொண்டிருந்த ஐயப்பமார்களின் நடமாட்ட சத்தங்களும் சரண கோஷங்களும் பஜனைப் பாடல்களும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.
நாங்கள் நடந்துகொண்டே இருப்பதாகவும், வானுயுர நெடிதுயர்ந்த மரங்களின் வேர்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து மண்டிக் கிடந்த வழுக்கு மலைப் பாதைகளை தாண்டி சென்று கடப்பதாகவும் நினைவினில் ஓடிக்கொண்டே இருக்கின்றன. ‘அடுத்த யாத்திரை எப்போது?’ என இப்போதே மனது தேடி அதை நோக்கி ஓடுகிறது. அந்த அளவுக்கு சங்கர மோகினி புத்திர பாலனின் மோகனத்தால், ஆழ்நிலைப் பரவசத்தில் ஆட்பட்டு அகப்பட்டுக் கொண்டேன்.
அதுவும் அன்று கரிமலை கரிவிலந்தோடு அடிவாரத்தில் தங்கியிருந்த அந்த இரவு... ஒருவித அனுபவத்தை தந்திருந்தது. அனைவராலும் மறக்க முடியாததாக இருக்கிறது. இப்படி ஒரு மிரட்டல் அனுபவம் கிடைக்குமென்று குழுவில் பயணித்த யாருக்கும் அன்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எல்லோரும் கரிமலையை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். வழியில் காடு, மலை என ஏறி, இறங்கி சுமார் 6 மைல் தூரம் நடந்து, அழகிய வனத்தில் இருந்த ‘காளைகட்டி’ சிவபார்வதி ஆலயம் சென்று அடைந்தோம். மகிஷியை கொன்ற தன் மகன் மணிகண்டனை வாழ்த்துவதற்காக வந்த சிவபெருமான், தனது வாகனமான காளையைக் கட்டிய இடம் என்று கருதப்படுவதால், இந்த இடத்துக்கு ‘காளைகட்டி’ என்ற பெயர் ஏற்பட்டது.
ஆலயத்தில் சிவன் பார்வதி தரிசனம் சிறப்பாக அமைந்தது. இந்த ‘காளைகட்டி’ ஆலயத்தில் குரு வைத்தியநாத ஐயப்பன் காணிக்கையாக வழங்கியிருந்த ஆலயமணியானது பீடத்தில் கம்பீரமாக நிப்பாட்டி வைக்கப்பட்டிருந்தது. அதனை எங்கள் குழு ஐயப்பமார்கள் அனைவரும் மணியில் கட்டியிருந்த கயிற்றினைப் பிடித்து இழுத்து அடித்து அதிரச் செய்து கானகமெங்கும் ஒலியை பரவச் செய்து கொண்டிருந்தோம்.
‘காளைகட்டி’ சிவ பார்வதி ஆலயத்தின் தனிச் சிறப்பாக வெடி வழிபாட்டினைக் கூறுகிறார்கள். வேண்டி வரும் பக்தர்கள் தங்கள் குடும்பத்தினர் பெயர் சொல்லி, வெடி வேட்டு வெடிக்க செய்தால் குடும்ப கஷ்டம், சங்கடம், சஞ்சலம், எதிரிகள் தொல்லை நீங்கும் என்பது இங்கு நம்பிக்கை. பக்தர்கள் வெடி வழிபாட்டுக்கு டோக்கன் வாங்கியதும் கோயில் பிரதான பிரகார கவுன்டரில் இருந்து மலையின் உச்சியில் இருந்து வெடி வெடிப்பவருக்கு மைக் மூலம் டோக்கன் வாங்கிய ஐயப்ப பக்தரின் பெயர் சொல்லி, அவரது குடும்பம் செழித்து தழைத்தோங்கி சந்ததிகள் பல்கி பெருகி சகல செளந்தர்ய செளபாக்கிய வாழ்வு பெற வேண்டும் என்று கூறி... ‘ஒரு வெடி வெடிக்கட்டும்’ என்று மலையாளத்தில் சம்சாரிக்கப்படுகிறது. அடுத்த நிமிடத்தில் அந்த மலைக்காடெங்கும் வேட்டு வெடித்து அதிர்கிறது. ‘காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா!’ என்று கோஷமிட்டபடி, வேட்டு வெடித்த மகிழ்ச்சியில், ஐயப்பன்மார்கள் அனைவரும் மேற்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.
காளைகட்டியிலிருந்து கிழக்கே சுமார் ஒன்றரை மைல் நடந்துவந்தால் அழுதா நதி. மணிகண்டனால் தூக்கி எறியப்பட்ட மகிஷியின் உடல் இந்த நதிக்கரையில் விழுந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இயற்கை அழகும், நெடிய மரங்களும் அவற்றை அணைத்து நிற்கும் பசுங்கொடிகளும், பள்ளத்தாக்கில் ஓடிவரும் அழுதா நதியையும் பார்த்தால் நம்மைப் பரவசமடையச் செய்யும். அத்தகைய அழுதா நதியை சீக்கிரமே சென்று அடைந்துவிட்டால், அதிக நேரம் குளிக்கலாம் என்கிற ஆசையால் ஐயப்பமார்கள் அனைவரும் வேகமாக நடந்து கொண்டிருந்தோம். உச்சி வெயில் விரட்டிக் கொண்டிருக்க, வழியில் தென்பட்ட கருப்பசாமி கோயிலில் கருப்பனையும், காளியையும் நின்று தரிசித்துவிட்டு மீண்டும் நடையை எட்டிப் போட்டிருந்தோம்.
சரியாக மாலை 4 மணி. எங்களை வரவேற்றது அழகிய அழுதா நதியின் கரையோர குழிமாவு கிராமம். திட்டமிட்டபடி, நதிக்கரை அருகே உள்ள விஜயன் ஐயப்பன் என்பவரின் விரியில் (தங்குமிடம்) தங்கி விட்டோம். அன்று மாலை அழுதா நதியில் நினைத்தபடி அதிக நேரமெடுத்து ஆனந்தமாக குளித்தோம். குளித்துக்கொண்டிருக்கும்போதே, குரு வைத்தியநாத ஐயப்பன் சொல்லியது ஞாபகத்துக்கு வர, அழுதா நதியில் மூழ்கி, கல் ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டேன். அது 2015-ம் வருடம் டிசம்பர் மாதம் 15-ம் தேதிக்கு மேல் தொடங்கிய யாத்திரை. அப்போதுதான் முதன்முதலாக மாலை இடுகிறேன் என்பதால் நான் ‘கன்னி ஐயப்பன்’. (கன்னி ஐயப்பன் - முதன்முறை மாலை அணிந்து வருபவர்) கன்னி ஐயப்பன் என்பதால் அழுதா நதியில் கல் எடுத்து, அதனை கல்லிடும் குன்றில் வைத்து வழிபட்டுச் செல்ல வேண்டும் என்பதனை எனக்கு குரு வைத்தியநாத ஐயப்பன் முறையாக முன்னமே கூறி வழிநடத்தியிருந்தார்.
‘அழுதா நதியே சரணம் ஐயப்பா!’ என ஆற்றுக்குள் நின்றிருந்த ஐயப்பமார்கள் வான்முகிழ்களோடு விளையாடிக் கொண்டிருந்த அந்தி நேரத்து மாலையில் வானளாவிய மலையினையும் அதிலிருந்து வழிந்தோடி வரும் ஆற்றினையும் வணங்கி கரையேறினோம்.
பிறகு, விரி. ஸ்ரீ பாயில் அனைத்து ஐயப்பமார்களின் இருமுடியும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்து. அதன் முன் எங்களுடன் எப்போதும் கொண்டு செல்லும் சிறிய அளவிலான விக்கிரகத்தில் குடி கொண்டிருந்த ஐயப்பன் சர்வ அலங்காரத்துடன் எங்களின் பஜனைக்கு எழுந்தருள அன்பனாய், நண்பனாய், குழந்தையாய், தகப்பனாய் காத்திருந்தான்.
நதியில் மூழ்கி எடுத்த கல்லை குரு வைத்தியநாத ஐயப்பனிடம் கொடுத்தேன். அதனை பூஜைக்கு தயாராக இருந்த ஐயப்பன் விக்கிரகம் முன் வைத்துவிட்டார். பஜனை ஆரம்பித்தது. சில ஐயப்பமார்கள் மட்டும் ‘சமையல் குரு’வான மாமா ஐயப்பன், நரசிம்மன் ஐயப்பனுக்கு உதவி கொண்டிருக்க, வேகமாக சமையலும் பஜனையுடன் இணைந்து நடந்து கொண்டிருந்து. பஜனையில் விஜய் ஐயப்பன், ராஜேஷ் ஐயப்பன், சுபாஷ் ஐயப்பன் என அனைவரும் கலக்கி கொண்டிருந்தனர்.
பஜனை முடியவும் சுவாமிக்கு தீபாராதனை. நைவேத்யம். அடுத்ததாக பசியுடன் இருந்த எங்களுக்கு இலை போட்டு அன்னதானம் நடந்தது. எல்லோரும் அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா! என்று கூறி உணவருந்தினோம்.
அன்று நடந்த நடையில் என் பாதமெல்லாம் புண்ணாகி சிவந்திருந்தது. இன்னும் நடக்கவே ‘ஆரம்பிக்கவே இல்லையே... அதுக்குள்ளயே இப்படியா’ என்று நினைத்துக் கொண்டேன். இவ்வளவுக்கும் மாலையிட்ட 48 நாட்களும் செருப்பு அணியாமல், அருகிலுள்ள மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலுக்கு சென்று வணங்கி வரும் அளவில் தினமும் காலை மாலை என நடந்து கொண்டுதான் இருந்தேன். ஆனாலும்கூட பாதம் அவ்வளவு மென்மையாக இருந்தது. சின்னச் சின்ன கற்களெல்லாம் குத்தியது பாதங்களில் அச்சாகப் பதிந்திருந்தது. ஒரே நாளில் பல கிலோ மீட்டர்கள் சமதளமற்ற பாதையில் நடந்து வந்ததாலும் சிவந்திருக்கிறது என்பதை மற்ற ஐயப்பமார்களிடம் சொல்லி பேசிக்கொண்டிருக்கும்போதே களைப்பில் கண்ணயர, அனைவரும் உறங்கிவிட்டோம்.
ராத்திரி முழுவதும் ‘இது என் ஏரியா’ அப்படியென்பதை சொல்லாமல் சொல்லி கடும் குளிரைப் பாய்ச்சிக் கொண்டிருந்தது பனி. அன்று பனி போட்ட மெட்டு தனி தாள இசையுடன் இருந்தது. பனி தாளம் போடுமா? போட்டது. காரணம், நாங்கள் தங்கியிருந்த விரியின் ஒரு பகுதியில் தகர செட் போட்டு மேல் பகுதியில் மூடியிருந்தார்கள். அதற்கு பக்கத்திலே நீண்டு வளர்ந்திருந்த மரங்களை முழுவதுமாக நனைத்து கிளைகளின் வழியாக வழிந்தோடி வந்த பனி, ஆலங்கட்டி மழைபோல... டம் டம்மென்ற சத்தத்தோடு தகரத்தில் விழுந்து ஒருவித தாள, லயத்தோடு இரவின் நிசப்தத்தில் உள்ளடி வேலை செய்துக் கொண்டிருந்தது.
மறுநாள் அதிகாலை 6 மணி. படுத்திருந்த அனைவரையும் பனி முழுவதுமாக நனைத்திருந்தது. தூங்கும்போது குளிருக்கு மூடியிருந்த போர்வையானது காலையில் எழுந்திருந்தபோது நானொருபுறமும், போர்வை ஒருபுறமுமாகத்தான் இருந்தோம். இது எப்போதும் நமக்கு வாடிக்கைதான் என்றாலும் அன்றைய பனி உடலில் செமத்தியாக ஏறியிருந்தது.
ஊசியாய் தைத்த குளிரில் நடுங்கிக் கொண்டே, மீண்டும் அழுதா நதியில் ஒரு குளியல். அந்தக் குளிரில் தண்ணீரில் உடல் மூழ்கியதும்தான் தாமதம். வெளியே எழுந்ததும் உடல் புத்துணர்வில் பறந்தது. புதிதாகப் பிறந்தது போன்று ஒரு பரவசம். சொல்லெனாப் பரவசத்தை வார்த்தைகளில் விவரித்துவிட முடியாது. அந்தப் பரவசமானதை இப்படியான இந்த அதிகாலை நேரத்து குளிருடன் மலைப்பிரதேசத்து கடும் பனியில் நனைந்து கரைந்து இரவெல்லாம் ஓடும் ஆறுகளால் மட்டுமேதான் தர முடியும்.
அதன்பிறகு ஜில்லென்றிருக்கும் ஆற்றில் திரும்பத் திரும்ப மூழ்கி எழுந்ததால் உடலெல்லாம் ஆவி பறந்தது. வாயைத் திறந்து திறந்து விளையாட்டாக ஆஹ்.. ஆஹ்... என்றால் அவ்வளவு பனியும் ஆவியாக பறந்து கொண்டிருந்தது. இது அக்மார்க் சுத்தமான பனி விளையாட்டு. இரவெல்லாம் சட்டை இன்றி குளிரில் நடுங்கி கொண்டிருந்த நம் உடலுக்கு... கல்கண்டாக ஓடும் தண்ணீரைப் பார்த்ததும் ஒரு ஜில் நடுக்கம் இருந்ததுதான். ஒரு நிமிடம் தாமதித்தாலும் அவ்வளவுதான்னு நினைத்து, சடார்ன்னு தண்ணிக்குள் இறங்கி ஒரே முங்கு. ஆஹா ஆஹா. ஆனந்தம்.
அதுவரை நம்மை பயமுறுத்தி நடுங்க வைத்துக்கொண்டிருந்த பனி, எங்கே போனது என்று தெரியாது. உடல் சிலிர்த்து ரோமங்களெல்லாம் புல்லரித்து நிற்கும். என்னடா பனி, எப்படி இருக்கேன்னு கேட்கும். உடல் மொத்தமாக நனைந்து குளிரை எதிர்கொண்டு வம்புக்கு இழுத்துக் கொண்டுவிடும். ஆனால், இதிலிருந்து ஒன்று கற்றுக் கொள்ளலாம். எத்தகைய பிரச்சினைகள் என்றாலும் அது பனியைப் போல பயத்தைத் தரும். அதற்கு பயந்து ஓடிவிடாமல் அதனை தைரியமாக எதிர்கொள்ளும்போது, நாம் பனியை விட அதிக குளிருடைய ஆற்றுக்குள் மூழ்கி எழும் உடலைப் போன்று எதிர்த்து நிற்கும் போது, பயமுறுத்திய சின்னச் சின்ன பனி போன்றப் பிரச்சினைகள் எல்லாம் சிதறி காணாமல் ஓடிவிடும் என்பதுதான்.
குளியல், விளையாட்டு என ஆனந்தமாக ஒரு வழியாக அழுதாவில் இருந்து தயாராகி, இருமுடி எடுத்துக்கொண்டு சிவ பார்வதி கோயிலில் சிதறு தேங்காய் அடித்துவிட்டு, முக்குழியை நோக்கி எட்டி நடை போட்டிருந்தோம். மறக்காமல் ஐயப்பன் விக்கிரகம் முன் வைத்திருந்த அழுதா நதி கல் என் கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்தக் கல்லினை முக்குழி செல்லும் வழியில் ஒரு காத தொலைவில் வரும் கல்லிடும் குன்று எனும் இடத்தில் வைத்து வணங்கிச் செல்ல வேண்டும்.
வழியிடையில் கல்லிடும் குன்று வந்தது. அழகான மலைச் சரிவினில் அடர்த்தியாக 10 மீட்டர் அளவு அகலம் கொண்ட பாறையாக இருந்தது. அதன் இடையே தண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. இந்த இடத்தினில் எல்லோரும் வணங்கி நின்று, கன்னி ஐயப்பன்கள் எல்லோரும் நதியில் எடுத்து வந்திருந்த கல்லை அந்தப் பாறை அருகினில் வைத்து வணங்க, நானும் வணங்கினேன். கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா!
இதற்கான காரணம் என்ன என்றால், மகிஷியை வதம் செய்த ஐயப்பன், அவளது உடலை இங்கு புதைத்துவிட்டு, கனமான கற்களை வைத்துச் சென்றாராம். இதன் அடிப்படையில் அழுதா நதியில் எடுத்து வந்த கற்களை பக்தர்கள் இவ்விடத்தில் போட்டுச் செல்கிறார்கள். இந்த இடத்தில் கல்லைப் போடும் பக்தர்கள், தங்கள் பாவம் நிவர்த்தியாக வேண்டும் என்று வேண்டிக்கொள்வர். மகிஷி பாவத்தின் சின்னம். புதைந்து கிடக்கும் பாவச் சின்னம் மீண்டும் எழுந்து விடக்கூடாது என்பதால், கல்லைப் போட்டு எழவிடாமல் செய்கின்றனர்.
மேலும் அரை காத நடைபயணத்தில், அழுதாமலை உச்சி. இங்கு ‘தேவன் வியாக்ரபாதன்' என்ற பெயரில் ஐயப்பசுவாமி அருளுகிறார். "வியாக்ரம்' என்றால் "புலி'. ஐயப்பன் புலிகளை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, தன்னைக் காணச் செல்லும் பக்தர்களைப் பாதுகாக்கும் காவலராக விளங்குகிறார். ஆன்மிக ரீதியாக, இதை வேறு மாதிரியாக பொருள் காணலாம். மனிதன், இந்த உலக இன்பத்தை பெரிதென நினைக்கிறான். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய இன்பங்களை அடைய ஆசை கொண்டு, பாதகங்களைச் செய்யக் கூட தயாராகி விடுகிறான். இந்தப் பாதகங்களே மனதை ஆட்டிப்படைக்கும் புலிகளுக்கு ஒப்பிடப்படுகிறது.
இந்தக் கொடிய புலிகளை கட்டிப்போட்டு விட்டால் மனதில் நல்ல சிந்தனைகள் மட்டுமே தங்கும். பக்தி மார்க்கத்துக்குள் மனிதன் வருவான் என்பதே இதன் தாத்பரியம். ஐயப்பனை வணங்கினால், மாலையிட்டால் மனது பக்குவப்பட்டு விடுமா? - அடுத்தடுத்துப் பார்க்கலாம்.
- ஜி.காந்தி ராஜா | தொடர்புக்கு: gandhiraja.g@hindutamil.co.in
| காட்டு வழிப் பயணம் தொடரும் |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT