Last Updated : 25 Dec, 2023 05:58 AM

 

Published : 25 Dec 2023 05:58 AM
Last Updated : 25 Dec 2023 05:58 AM

ஆண்டாள் திருப்பாவை 9 | உலக மாயையில் இருந்து விடுபடுவோம்..!

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய,
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
'மாமாயன், மாதவன், வைகுந்தன்' என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!

தூய்மையான அழகிய மணிகள் பதிக்கப்பட்ட மாளிகையின் நான்குபுறங்களிலும்விளக்குகள்ளரிகின்றன. அங்கிருந்துஅகில் முதலான நறுமணப் பொருட்களின் வாசம் வருகிறது. எவ்வித கவலையும் இன்றி, அந்த அறையில் மென்மையான பஞ்சு மெத்தையில் உறங்கிக் கொண்டிருக்கும் எங்கள் மாமன் மகளே! உடனே நீ எழுந்து வந்து மணிகள் பொருத்தப்பட்ட இல்லக் கதவைத் திறக்க வேண்டும். மாமீ! அவளது அன்னையாகிய நீங்களாவது அவளை எழுப்பிவிட மாட்டீர்களா? அவளுக்கு காது கேட்காதா? அவளால் பேச இயலாதா? அல்லது எழ முடியாத அளவுக்கு மயக்கமா? அவ்வளவு பெருந்தூக்கமா? ஏதாவது மந்திரத்தில் கண்டுண்டு கிடக்கிறாளா?

மாமாயனே! மாயங்கள் பல செய்து அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டவனே, பெருந்தவத்துக்கு சொந்தக்காரனான மாதவனே, வைகுண்டத்தில் வீற்றிருக்கும் நாதனே என்று எம்பெருமானுடைய திருநாமங்கள் பலவற்றைக் கூறி, அவனை அழைப்பதற்காக நாங்கள் தயாராக உள்ளோம். எவ்வளவு அழைத்தும் உங்கள் மகள் எழுந்து வரவில்லையே?

மாமியே! உன் தோழிகள் வந்துள்ளனர் என்று அவளை எழுப்புங்கள் என்று தோழியின் தாயாரிடம் வேண்டுகிறாள் கோதை.உலகில் உள்ளவற்றை நிலையானவை என்று எண்ணி மயக்கத்தில் இருக்க வேண்டாம் என்றும், பரந்தாமனே நிலையானவன் என்றும் உலக மக்களுக்கு அறிவுறுத்துவது போல் இந்த பாசுரம் அமைந்துள்ளது. அவனை சிக்கெனப் பிடித்துக் கொண்டால் அனைத்து நலன்களும் கிட்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x