Published : 23 Dec 2023 08:49 AM
Last Updated : 23 Dec 2023 08:49 AM
ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு இன்று (டிச.23) காலை 6:30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் ‘கோவிந்தா’ ‘கோபாலா’ கோஷம் முழங்க பரமபத வாசல் வழியாக பெரிய பெருமாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
வராக சேத்திரமாக விளங்கும் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்து சிறப்பு வாய்ந்த தலமாகும். இக்கோயிலானது பெருமாளை நினைத்து திருமொழி பாடிய பெரியாழ்வாரும், திருப்பாவை பாடிய ஆண்டாளும் பிறந்து பெருமைக்குரிய தலமாகும்.
கண்ணனை கரம்பற்ற நினைத்த ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து திருப்பாவை பாடி கண்ணனை கரம் பிடித்தார் என்பது ஐதீகம். அனைத்து பெருமாள் கோயில்களிலும் மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவை தான் பாடப்படுகிறது. அதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் மார்கழி நீராட்ட உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
மார்கழி நீராட்ட விழாவில் நடைபெறும் பகல் பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி, எண்ணெய் காப்பு உற்சவம், கூடாரை வெல்லும் சீர் வைபவம் ஆகிய உற்சவங்களில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வர். அதன்படி இந்த ஆண்டு ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட விழாவில் பகல் பத்து உற்சவம் கடந்த 13-ம் தேதி பச்சை பரப்புதலுடன் தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தில் வடபத்ர சயனர் சந்நிதியில் உள்ள கோபால விலாசம் எனும் பகல் பத்து மண்டபத்தில் தினசரி பலவிதமான அலங்காரங்களில் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் மற்றும் ஆழ்வார்கள் எழுந்தருளி ஒருசேர பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இந்நிலையில் நேற்றுடன் பகல் பத்து உற்சவம் நிறைவு பெற்றது. ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5:50 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. ‘கோவிந்தா’ ‘கோபாலா’ கோஷம் முழங்க பெரிய பெருமாளும், அதன்பின் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாரும் பரமபத வாசல் வழியாக எழுந்தருளினர். அவர்களை பெரியாழ்வார், வேதாந்த தேசிகர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், கூரத்தாழ்வார், நம்மாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் வரவேற்றனர். மாட வீதிகள் வழியாக வீதி உலா வந்து ஆண்டாள் ரெங்கமன்னார், பெரிய பெருமாள் ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதன்பின் ராப்பத்து மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள் ரங்க மன்னார், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் ஆகியோரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசி விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோயில் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர். டிஎஸ்பி முகேஷ் ஜெயகுமார் தலைமையில் 300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவேங்கட முடையான் கோயில், ராஜபாளையம் அயன்கொல்லங்கொண்டான் இடர்தவிர்த்த பெருமாள், சேத்தூர் ஸ்ரீநிவாச பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் காலை 5:50 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT