Published : 31 Jan 2018 02:26 PM
Last Updated : 31 Jan 2018 02:26 PM
பழநியில் நடைபெற்ற தைப்பூசவிழா தேரோட்டத்தில் அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தேரில் ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஜனவரி 25 ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச விழா துவங்கி பத்து நாட்கள் நடைபெற்றுவருகிறது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழநிக்கு வந்து சுவாமிதரிசனம் செய்துவருகின்றனர். விழாவின் ஏழாம் நாளில், தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தைக் காண பக்தர்கள் பழநியில் குவிந்ததால், பழநி நகரமே பக்தர்கள் கூட்டத்தால் திணறியது.
தேரோட்டத்திற்கு முன்னதாக சண்முகநதியில் முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தேரில் எழுந்தருளினார். காலையில் மணிக்கு பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து இழுக்க, தேர் நான்கு ரதவீதிகளில் வலம் வந்தது.
வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை ஆர்வமுடன் வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் கண்டுகளித்தனர். பகல் 12.00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.
தைப்பூசத் தேரோட்டத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநியில் திரண்டதால் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
பழநி மலையடிவாரத்தில் கிரிவீதிகளில் காவடி எடுத்து ஆடியும், பக்திப்பாடல்களை பாடியும் தைப்பூசவிழாவை பக்தர்கள் கொண்டாடினர். தேரோட்டத்தில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா, திண்டுக்கல் எஸ்.பி., சக்திவேல், இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., சித்தனாதன் சன்ஸ் ராகவன், கந்தவிலாஸ் பாஸ்கரன், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT