Last Updated : 21 Dec, 2023 03:32 AM

 

Published : 21 Dec 2023 03:32 AM
Last Updated : 21 Dec 2023 03:32 AM

பார்க்கிங் ஆன மாடவீதி... பக்தர்கள் சிரமம் - காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலுக்கு நிரந்தர வாகன நிறுத்துமிடம் அமையுமா?

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் சந்நிதி தெருவின் சாலையில் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சந்நிதி தெரு மற்றும் மாடவீதிகளில் வாகனங்களை நிறுத்துவதால், அந்த சாலையில் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, தனியாக வாகனநிறுத்துமிட வசதியை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்கும் உலக பிரசித்திப் பெற்ற வரதராஜபெருமாள் கோயில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அனந்தசரஸ் புஷ்கரணி தீர்த்த குளத்தில் அத்திவரதர் குடி கொண்டுள்ளார். மேலும், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் வெளியே வந்து, 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

இதனால், இக்கோயிலில் சுவாமிதரிசனம் செய்வதற்காக உள்ளூர் மற்றும் கர்நாடகா,ஆந்திரா, தெலங்கான, கேரளா மற்றும் வடமாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் மாலை அணிந்து சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம், கூட்டமாகவும் மற்றும் தைப்பூசத்துக்காக மேல்மருவத்தூர் அதிபராசக்தி கோயிலுக்கு வரும் பக்தர்களும் அதிகளவில் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதனால், கோயிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளை கோயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

ஆனால், வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்துவரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்தி இயக்க முறையான வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், கோயிலுக்கு வரும் ஏராளமான வாகனங்கள் மேற்கு ராஜகோபுரம் அமைந்துள்ள சந்நிதி தெருவில் குடியிருப்புகள் முன்பு வரிசையாக நிறுத்தப்படுகின்றன. இதுதவிர, குடியிருப்புகள் அதிகமாக உள்ள தெற்குமாடவீதியில் சாலையின் நடுவே வரிசையாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்திவைக்கப்படுகின்றன.

வரதராஜ பெருமாள் கோயிலின் தெற்குமாட வீதியில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.

இதனால், அந்த சாலையை பயன்படுத்தும் உள்ளூர் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும், சந்நிதி தெருவில் 16 கால் மண்டபத்தில் இருந்து செட்டித்தெரு சாலை வரையில் நிறுத்தப்படும் வாகனங்களால், குடும்பத்துடன் செல்லும் உள்ளூர் பக்தர்கள் மிகுந்த சிரமத்துடன் கோயிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், உள்ளூர் மக்களின் போக்குவரத்து மற்றும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கோயிலுக்கு வரும் வாகனங்களை நிறுத்த, வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்த அறநிலையத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, உள்ளூரைச் சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது: காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர் மூலம் கோயிலுக்கு வரும் வாகனங்களிடம் கட்டணம் வசூலித்து வருகிறது. மேலும், கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், சந்நிதி தெருவின் முனையில் சாலையின் நடுவே வாகனங்களை நிறுத்தி அராஜகமாக கட்டணம் வசூலிப்பதால், உள்ளூர் மக்கள் அச்சாலையை எளிதாக கடந்து செல்ல நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதேபோல், தெற்குமாட வீதியில் நாள் முழுவதும் சாலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால், அச்சாலையை உள்ளூர் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் வருவாயை மட்டுமே குறிக்கோளாக கருதி செயல்படாமல், உள்ளூர் மக்கள் மற்றும்பக்தர்களின் நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மேலும், அத்திவரதர் வைபவத்தின்போது திருவீதி பள்ளம் செல்லும் சாலையின் வலது புறத்தில் தற்காலிகமாக வாகனங்கள் நிறுத்தி இயக்கப்பட்டன. அதேபோல், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, அறநிலையத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இதற்கு தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

சங்கர்

இதுகுறித்து, ஆட்டோ ஓட்டுநர் சங்கர் கூறியதாவது: ஆட்டோவில் பயணிக்கும் நபர்களை இதற்கு முன்பு சந்நிதி தெருவில் உள்ள 16 கால் மண்டபம் பகுதியில் இறக்கி வந்தோம். ஆனால், வெளியூர்களில் இருந்து வரும் கார்கள் அனைத்தும் அப்பகுதியில் நிறுத்தப்படுவதால், தற்போது 2 தெருக்களை சுற்றிக்கொண்டு தெற்குமாட வீதியின் முனையில் பயணிகளை இறக்கிவிடுகிறோம். இதனால், எங்களுக்கு கூடுதல் எரிபொருள் செலவு ஏற்படுவதால் பயணிகளிடம் கட்டணமும் அதிகமாக வசூலிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். மேலும், தெற்குமாட வீதியில் ஆட்டோக்களை நிறுத்த போலீஸார் அறிவுறுத்தியுள்ள நிலையில், அந்த சாலை முழுவதிலும் கார்கள் நிறுத்தப்படுவதால் ஆட்டோ ஓட்டுநர்கள் வாகனங்களை நிறுத்தஇடமில்லாமல், குடியிருப்பு தெருக்களின் சாலையில் நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால், அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் வாக்கு வாதம் செய்வதால், செய்வதறியாமல் உள்ளோம். மேலும், காஞ்சிபுரம்-செங்கல்பட்டு செல்லும் பிரதான சாலை உள்ள வடக்குமாட வீதியில், கோயிலின் மதில் சுவரையொட்டி வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்றார்.

இதுகுறித்து, வரதராஜ பெருமாள் கோயில் செயல் அலுவலர் சீனிவாசன் கூறியதாவது: வரதராஜ பெருமாள் கோயிலின் சுற்றுப்புற பகுதியில் கோயிலுக்கு சொந்தமாக நிலங்கள் இல்லாததால், அறநிலையத்துறை சார்பில் வாகன நிறுத்தமிட வசதி ஏற்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. எனினும், சந்நிதி தெரு மற்றும் தெற்குமாட வீதியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம். தற்போது, கோயிலுக்கு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து அப்பகுதியில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தலாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளதால், இதுதொடர்பாக மாநகராட்சிக்கு கடிதம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x