Published : 18 Jan 2018 10:43 AM
Last Updated : 18 Jan 2018 10:43 AM
இந்து சமய உயர்நெறிகளையும் தொன்மையான கலாசார மதிப்பீடுகளையும் விளக்கும் வகையில் இந்தியாவெங்கும் ஹிந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகிறது.
வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல், ஜீவராசிகளைப் பேணுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெற்றோர் ஆசிரியர் வணக்கம், பெண்மையைப் போற்றுதல், நாட்டுப்பற்றை உணர்த்தல் என்ற ஆறு உள்ளடக்கங்களில் 2014-ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சியின் ஒன்பதாவது நிகழ்வு இது. ஹிந்து ஆன்மிக சேவை மையமும் பண்பு மற்றும் கலாச்சாரப் பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஆண்டுதோறும் ஒருங்கிணைக்கின்றன.
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 24 முதல் ஜனவரி 29 வரை நடைபெறும் இக்கண்காட்சியின் முன்னோட்டம் கடந்த ஜனவரி 15 அன்று, மயிலாப்பூரில் விவேகானந்தா ரத யாத்திரையுடன் தொடங்கியது. விவேகானந்தர் உருவம் உள்ள 26 ரதங்கள் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரம் பள்ளிகளுக்குச் செல்லும்.
இந்தக் கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சிகளில் ‘ஸ்வாமி ஓம்காரனந்தா’, மேற்கு வங்க ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த ‘ஸ்வாமி போதாசரனானந்ஜி மஹராஜ்’, திபெத்திய பவுத்த தலைவர்களில் ஒருவரான ‘யோங்கே மிங்யுர் ரின்போச்சே’, ‘ராஷ்ட்ரிய சீக்கிய சங்கத்’ அமைப்பின் தேசியத் தலைவர் ‘குர்சரண் சிங் கில்’, சமண சமயப் பிரமுகர் ‘ஜெயின் பிரமுக் சமானி ஸ்ரீநிதிஜி’ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்தக் கண்காட்சியை ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி ஒருங்கிணைக்கிறார்.
நதி நீர் இணைப்புக்கான தீர்த்த யாத்திரை
ஜனவரி 24 அன்று நடைபெறும் ‘கங்கா காவிரி மங்கலதீர்த்த கைலாஷ் யாத்ரா’ நிகழ்ச்சியில் காவிரி-கங்கை நதிகள் இணைப்பை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான வட இந்தியப் பெண்கள் தீர்த்த குடங்களை ஏந்தி இந்நிகழ்ச்சி நடைபெறும் குருநானக் கல்லூரிக்கு ஊர்வலமாக வரவுள்ளனர்.
ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியின் ஆறு கருத்துகள் தொடர்பாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்குப் போட்டி நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் காலிறுதி, அரையிறுதிச் சுற்றுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போட்டிகளின் இறுதியில் வெற்றிபெறுபவர்களுக்குக் கண்காட்சி வளாகத்திலேயே பரிசுகளும் வழங்கப்படும். சம்ஸ்காரம் எனப்படும் பண்புநலப் பயிற்சி நிகழ்ச்சிகள் கண்காட்சியின் ஆறு கருப்பொருட்களைப் பங்கேற்பவர்களின் மனதில் நிறுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
“2009-ல் தொடங்கப்பட்ட இந்தக் கண்காட்சி 2014-ம் ஆண்டிலிருந்து தேசத்துக்குத் தற்போது அவசியமான ஆறு நெறிமுறைகளை அடிப்படையாகக்கொண்டு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மட்டுமின்றி ஜெய்ப்பூர், குருக்ராம், உதய்பூர், காஜியாபாத், கவுகாத்தி, ராஞ்சி, இந்தூர், ராய்பூர், புவனேஸ்வர், மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய 12 இடங்களில் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. சென்ற ஆண்டு சென்னைக் கண்காட்சிக்கு ஏழு லட்சம் பேர் வந்தனர்.
இந்தக் கண்காட்சி தொடங்கப்பட்டபோது 30 அமைப்புகள் கலந்துகொண்டன. தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்தச் சேவைக் கண்காட்சியில் பங்குபெறுகின்றன” என்கிறார் இந்தக் கண்காட்சியின் செய்தித்தொடர்பாளர் ஆறு. அண்ணல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT