Published : 16 Dec 2023 11:03 PM
Last Updated : 16 Dec 2023 11:03 PM
ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சனிக்கிழமை இரவு நடந்த சிறப்பு பூஜையில் தங்க இலையால் நெய்யப்பட்ட 18 கஜம் திருப்பாவை பட்டு உடுத்தி ஆண்டாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வாரின் மகளாக அவதரித்த ஸ்ரீ ஆண்டாள் கண்ணன் மீது கொண்ட காதலால் அவரை மணம் முடிக்க வேண்டி மார்கழி மாதத்தில் பாவை நோன்பிருந்தார். மார்கழி மாதத்தின் 30 நாட்களிலும் ஆண்டாள் பாடிய 30 பாடல்கள் திருப்பாவை என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதத்தில் 30 நாட்களும் உற்சவமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மார்கழி மாதத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் வந்து பெண்கள் பாவை நோன்பை தொடங்குவர்.
அதேபோல் அனைத்து பெருமாள் கோயில்களிலும் மார்கழி மாதத்தில் நடை திறக்கப்படும் போது ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாடல்கள் பாடப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதத்தின் முதல் நாளில் ஆண்டாள் தங்க இலைகளால் திருப்பாவை பாசுரங்கள் நெய்யப்பட்ட 18 கஜம் திருப்பாவை பட்டுடுத்தி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அந்த வகையில் இன்று மார்கழி மாதம் தொடங்குவதை முன்னிட்டு சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தங்க இலைகளால் திருப்பாவை 30 பாசுரங்களும் நெய்யப்பட்ட அப்பாவை பட்டு அனுபவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT