Published : 12 Dec 2023 04:03 PM
Last Updated : 12 Dec 2023 04:03 PM
வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், சதுரகிரியில் லேசான மழை பெய்தாலே பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதனால் ஓடைகளில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சாப்டூர் வனச்சரகத்தில் கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்தில் சதுரகிரி அமைந்துள்ளது. இங்கு சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களும், சித்தர்கள் குகைகளும் உள்ளன. மேலும் சதுரகிரி மலையில் மருத்துவ குணமுள்ள தீர்த்தங்களும் மூலிகைகளும் அதிக அளவில் உள்ளன.
சதுரகிரி கோயிலுக்கு விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாணிப்பாறை வழியாகவும், மதுரை மாவட்டம், பேரையூர் வாழைத்தோப்பு பாதை வழியாகவும், தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பாதை வழியாகவும் செல்லலாம். இதில் எளிதாக இருப்பதால் வத்திராயிருப்பு தாணிப்பாறை வழியாகச் செல்ல அதிகாரப்பூர்வமாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தாணிப்பாறையில் உள்ள வனத்துறை நுழைவு வாயிலில் இருந்து மாங்கனி ஓடை, வழுக்குப் பாறை, மலட்டாறு, சங்கிலிப்பாறை ஆகிய நீரோடைகளைக் கடந்து கரடு முரடான மலைப்பாதை வழியாக 7 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும்.
இங்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்து வந்த நிலையில், 2015-ம் ஆண்டு சதுரகிரி மலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பின் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பின் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி என மாதம் 8 நாட்கள் மட்டுமே, சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மலைக் கோயிலில் இரவில் தங்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் 2015-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தாணிப்பாறை அடிவாரம் முதல் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் வரை பாதை அமைக்கவும், சங்கிலிப் பாறை ஓடை, மாங்கனி ஓடை, பிலாவடி கருப்பசாமி கோயில் ஓடை ஆகியவற்றில் பாலம் அமைக்கவும் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மலைக் கோயிலில் பக்தர்கள் பாதுகாப்பாக தங்குவதற்காக 4 அறைகள் அமைக்கப்பட்டன.
மாங்கனி ஓடை வரை பாதை அமைக்கப்பட்ட நிலையில் அதன் பின் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால் வத்திராயிருப்பு மலை அடிவாரப் பகுதியில் லேசான மழை பெய்தாலே சதுரகிரி செல்வதற்கு தடை விதிக்கப்படுவதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சதுரகிரி மலைப்பாதையில் பாதை அமைப்பதற்கு தடை விதிக்க கோரிய பொது நல வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, உரிய அனுமதி பெற்று பணிகளை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு அளித்த பதிலில், 2015-ம் ஆண்டு சதுரகிரி மலை பாதையில் பாதை அமைப்பதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
ஒன்றே முக்கால் கி.மீ. தூரம் பாதை அமைத்த நிலையில் ஒப்பந்ததாரர் உயிரிழந்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது பணிகள் நடக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. சதுரகிரி மலைப்பாதையில் கட்டுமானப் பணி மேற்கொள்ள உயர் நீதிமன்றம் தடை விதிக்காததை அடுத்து, கிடப்பில் உள்ள பணிகளை விரைந்து தொடங்கி, ஓடைகளில் பாலம் அமைக்க விருதுநகர், மதுரை மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத் துறை, வனத்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT