Last Updated : 11 Jan, 2018 10:13 AM

 

Published : 11 Jan 2018 10:13 AM
Last Updated : 11 Jan 2018 10:13 AM

ஆண்டாள் சொன்ன ‘அக்கார அடிசில்!’ உங்கள் வீட்டுக்கே வருவார் அரங்கன்!

பால்சாதம் மூடும்படியாக நெய் விட்டு பால் சாதம் செய்துகொடுக்கிறேன் என்று பாடுகிறாள் ஆண்டாள். அதுவும் எப்படி? பாத்திரத்தில் இருந்து எடுத்தால், உணவில் கலந்திருக்கும் நெய்யானது, அப்படியே முழங்கை வரை வழியுமாம்! அப்படி பாலும் நெய்யும் இனிப்புமாகக் கலந்து படைக்கிறேன், எழுந்திருடா கண்ணு. என்ன இப்படித் தூங்குகிறாய் என பாடி அழைக்கிறாள்.

அந்த பால் சாதம், பின்னாளில் அக்கார அடிசிலாகிவிட்டது. அக்கார அடிசில் எனும் பகவானுக்குப் பிடித்த உணவை, இன்றைய நாளில் செய்வோம். நைவேத்தியம் படைத்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்கி, ஆனந்தம் கொள்வோம்!

அக்கார அடிசில் எப்படிச் செய்ய வேண்டும்? மதுரை அழகர் கோவில் ஸ்தானீக அர்ச்சகர் அம்பி பட்டாச்சார்யர் எப்படிச் செய்ய வேண்டும் என விளக்குகிறார்.

இதெல்லாம் தேவை!

தினை அரிசி - ஒரு கப்

பாசிப் பருப்பு - அரை கப்

பால் - 3 கப்

வெல்லம் நன்றாகப் பொடித்தது - இரண்டரை கப்

நெய் - அரை கப்

முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை - தலா 10 அல்லது 15

ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்

இப்படித்தான் செய்யணும்!

தினை அரிசி, பாசிப் பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் வாசனை வரும்வரை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஆறியதும் தண்ணீர்விட்டுக் களைய வேண்டும். அதனுடன் 3 கப் பாலைச் சேர்த்து குக்கரில் நன்றாக வேகவைக்க வேண்டும். 3 முறை விசில் சத்தம் வந்ததும் இறக்கிவைத்துவிட வேண்டும். அதன் பிறகு சூடு ஆறியதும் குக்கரைத் திறந்து சாதத்தை ஒரு குழிக்கரண்டியின் அடிபாகத்தால் நன்றாக மசிக்கவும்.

இப்போது, பொடித்து, நன்றாக தூள் செய்யப்பட்ட வெல்லம் ரெடியாக வைத்திருக்கிறோம்தானே! அந்த வெல்லத்துடன் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும். வெல்லம் நன்றாகக் கரைந்ததும் வடிகட்டி, பிறகு ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும். இப்போது அது கெட்டியானல் போதும், பாகு பதம் இருக்கவேண்டும் என்பதில்லை.

வேகவைத்திருக்கும் சாதத்தை இந்த வெல்லக் கரைசலில் சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். இப்போது பாதி நெய்யை ஊற்றுங்கள். எல்லாம் சேர்ந்து கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிடலாம். மீதியுள்ள நெய்யைச் சூடாக்கி அதில் முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த் தூள், உலர் திராட்சை ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து, அக்கார அடிசிலில் கொட்டி நன்றாகக் கிளற வேண்டும்.

இந்த அக்கார அடிசிலின் விசேஷமே... இனிப்புச் சுவைதான். ஆகவே மூன்று கப் வெல்லம் என்பதே யதேஷ்டம். தேவையென்றால் இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம். அப்படிச் சேர்ப்பதாக இருந்தால், நெய்யும் கொஞ்சம் சேர்க்கவேண்டும்.

சிறுவயதில், அக்கார அடிசில் பண்ணும் போது, அந்த வாசமே தெருவைத் தாண்டிப் போகும். கதவைத் திறந்து வைங்கப்பா. அக்கார அடிசில் வாசத்துக்கே பெருமாள் வந்துருவான் பாரு’ என்பாள் என் பாட்டி!

உங்கள் வீட்டிலும் இந்த நல்ல நாளில் அக்கார அடிசில் பண்ணி, பெருமாளுக்கு நைவேத்தியம் பண்ணுங்கள். அக்கார அடிசில் சாப்பிட அந்த அரங்கனே ஓடிவருவான் உங்கள் வீட்டுக்கு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x