Last Updated : 03 Jan, 2018 10:46 AM

 

Published : 03 Jan 2018 10:46 AM
Last Updated : 03 Jan 2018 10:46 AM

ராம நாம மகிமை!

ராமபிரானை சதாசர்வ காலமும் நினைத்து பூஜித்து, வழிபட்டு, பாடி, பாடலின் மூலமாகவே ஸ்ரீராமரை போற்றிக் கொண்டிருந்தவர் தியாகய்யர்.

தியாகய்யரின் இசையும் அவரின் ஞானமும் சோழ தேசத்தையும் கடந்து சென்றது. தொண்டை நாடான காஞ்சியம்பதியில் உள்ள ராமகிருஷ்ண யதீந்திரர் எனும் மகான், சகலத்தையும் அறிந்தார். தஞ்சைக்கு வந்தவர், தியாகய்யரை ஆசிர்வதித்து, ‘நீ சாதாரணன் அல்ல. இசையை கட்டுக்குள் வைத்திருப்பவன். இசையால் எவரையும் கட்டுண்டு வைப்பவன்! 96 கோடி முறை ராமநாமத்தை ஜபி. உன்னால் ராம நாம மகிமையானது உலகுக்கு வெளிப்படப் போகிறது’ என அருளிச் சென்றார்.

அந்த மகானின் வாக்கின்படி, தொடர்ந்து ராம நாமம் ஜபிப்பதில் மூழ்கினார் தியாகய்யர். கிட்டத்தட்ட 21 வருடங்கள். ஒருநாளில், ஒரு லட்சத்து 25 ஆயிரம் முறை ராமநாமத்தை ஜபித்தார். மெள்ள மெள்ள... தியாகய்யர் எனும் இளைஞர், மகானாகத் திகழ்ந்தார். இந்த காலகட்டத்தில் பலமுறை ஸ்ரீராம தரிசனம் கிடைத்து, அதில் அப்படியே திளைத்துப் போனார்! அப்போது அவரையும் அறியாமல் வந்து விழுந்த கீர்த்தனைகள் இன்றைக்கும் வேத ராகங்கள்! அந்த காலகட்டத்தில் இவர் இயற்றிய, ஏல நீத யாரது எனும் அடாணா ராகக் கீர்த்தனையும் ராகம்) கனுகொண்டினி எனும் பிலகரி ராகக் கீர்த்தனையும் இப்போது கேட்டாலும் மெய்ம்மறந்துவிடுவோம்!

கலகம் செய்பவர் என்று எல்லோராலும் சொல்லப்படும் நாரத முனிவர், ஒரு சந்நியாசி போல் வந்து, ஸ்வரார்ணம் எனும் கிரந்தத்தை வழங்கி அருளினார். தமக்குக் கிடைத்த அந்தக் கிரந்தத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு, சங்கீத இலக்கணங்கள் அமைந்த க்ருதிகள் பலவற்றை இயற்றி, இந்த உலகுக்கு வழங்கினார் தியாகய்யர்!

தியாகய்யரைப் போற்றுவோம். ராமரை வணங்குவோம். சகல செளபாக்கியங்களையும் இழந்த பல உன்னதங்களையும் தந்தருள்வார் ராமபிரான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x