Last Updated : 24 Jan, 2018 10:34 AM

 

Published : 24 Jan 2018 10:34 AM
Last Updated : 24 Jan 2018 10:34 AM

நாளை வாஸ்து பூஜை செய்யுங்க! வீட்டின் திருஷ்டி விலகி ஓடும்!

நாளைய தினம் வாஸ்து பூஜை செய்ய உகந்த நாள். எனவே புதுமனைப் புகுவிழா நடத்தவும் வீட்டில் கிரகத்தில் உண்டான தோஷங்கள் விலகவும் வாஸ்து பகவானை நினைத்து பூஜைகள் செய்யவும் உரிய நாள் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

கல்யாணம் பண்ணிப் பார், வீட்டை கட்டிப் பார் என்பார்கள். கல்யாணம் எனும் வைபவம் நடப்பதற்கு குருவருள் தேவை. அதேபோல் வீடு அமைவதற்கு வாஸ்து பகவானின் பேரருள் மிக மிக அவசியம்.

இறையருளும் குருவருளும் இருந்தால்தான், வாஸ்து பகவானின் அருளும் கிட்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். சொந்த வீடா, வாடகை வீடா என்பது முக்கியமில்லை.நாம் இருக்கும் வீட்டில், வாஸ்து பகவானின் ஆட்சியும் நம் எண்ணங்களுமே குடியிருக்கின்றன. ஆகவே நம் எண்ணங்களை நாம் சரிவர வைத்துக் கொள்ளவேண்டும். அதேபோல், வாஸ்து பகவானை ஆராதிக்கவேண்டும்.

மிகப்பெரிய பங்களா கட்டி குடியிருப்பார்கள் சிலர். ஆனால் எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவு, எப்போது பார்த்தாலும் நோய், சிகிச்சை என்று வாழ்க்கை சிக்கலாகவும் குழப்பமாகவும், நிம்மதி இல்லாமலும் ஆரோக்கியம் இல்லாமலும் இருக்கும். இப்படி இம்சித்துக் கொண்டே இருந்தால், வாஸ்து பகவானை அங்கே குளிரப்படுத்தவில்லை. சாந்தப்படுத்தவில்லை என்று அர்த்தம் என்கிறார்கள் ஜோதிடர்கள்.

நாளை (25.1.18) குரு வாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமை நாளில், வாஸ்து பகவானுக்கு உரிய நாளும் சேர்ந்தே வருகிறது. எனவே, வீட்டை சுத்தப்படுத்துங்கள். ஒட்டடை அடித்து, வீடு கழுவிவிட்டு, சாம்பிராணி புகையிட்டு தூப தீபம் காட்டுங்கள்.

காலை 9.52 முதல் 11.22 வரை வாஸ்து நேரம். அப்போது வீட்டில் விளக்கேற்றி, லலிதா சகஸ்ரநாமம் முதலான தெரிந்த ஸ்லோகங்களைப் பாடிப் பாராயணம் செய்யுங்கள். வீட்டில் உள்ள எட்டுத் திசைகளிலும் தூபதீபம் காட்டி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, காகத்துக்கு வழங்குங்கள்.

முடிந்தால், உச்சி வெயில் வேளையில், மதிய உணவுக்கு முன்னதாக, எலுமிச்சையால் வீட்டை திருஷ்டி சுற்றி, நாலாதிசையிலும் எலுமிச்சையைப் போடவும். வீட்டில் இருந்த கண் திருஷ்டி விலகிவிடும். அடிக்கடி வந்து இம்சை செய்த நோய்த் தொல்லையில் இருந்து விடுபடலாம். வாஸ்து பகவான் மனம் குளிர்ந்து போவார்.

வாடகை வீடோ... சொந்த வீடோ... உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நிம்மதியும் நிறைவுமாக வாழச் செய்வார் வாஸ்துபகவான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x