Published : 25 Nov 2023 06:18 PM
Last Updated : 25 Nov 2023 06:18 PM
சிவகாசி: சபரிமலை சீசன் தொடங்கியதை அடுத்து பக்தர்களின் வசதிக்காக சிவகாசி, ராஜபாளையம் வழியாக காரைக்குடி - எர்ணாகுளம் இடையே நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 28-ம் தேதி வரை வியாழன் தோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்றோ அல்லது நாளையோ தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் மகர ஜோதி சீசனுக்காக எர்ணாகுளம் - காரைக்குடி (06019), காரைக்குடி- எர்ணாகுளம் (06020) இடையே இரு மார்க்கத்திலும் வியாழன் தோறும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் காரைக்குடியில் புறப்பட்டு சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, ஆரியங்காவு, தெனமலை, புனலூர் வழியாக எர்ணாகுளம் செல்கிறது.
சிறப்பு ரயிலானது நவம்பர் 30, டிசம்பர் 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் இரு மார்க்கத்திலும் தலா 5 முறைகள் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் கூடுதல் நெருக்கடியை தவிர்ப்பதற்காக ஏற்கெனவே வாரம் இருமுறை இயங்கி வரும் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் ரயில் கால அட்டவணைப்படி சபரிமலை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி காரைக்குடியில் இரவு 11:30-க்கு புறப்பட்டு விருதுநகருக்கு 2 மணிக்கும், சிவகாசிக்கு 2.25 மணிக்கும், ராஜபாளையத்துக்கு 3 மணிக்கும், சங்கரன்கோவிலுக்கு 3:17 மணிக்கும், செங்கோட்டைக்கு காலை 4:20 மணிக்கும், புனலூருக்கு 6:55 மணிக்கும், எர்ணாகுளத்திற்கு 11:40 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் எர்ணாகுளத்தில் அதிகாலை 4:45 மணிக்கு புறப்பட்டு, புனலூருக்கு காலை 10:45 மணிக்கு, காரைக்குடிக்கு இரவு 7 மணிக்கு சென்றடைகிறது.
*30 சதவீதம் கூடுதல் கட்டணம்: இந்த ரயிலில் ஒரு 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி, இரு 3-ம் வகுப்பு குளிர் சாதன பெட்டிகள், 7 முன்பதிவு பெட்டிகள், இரு முன்பதிவு இல்லாத பெட்டிகள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இரு பெட்டிகள் என மொத்தம் 14 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலில் வழக்கமான கட்டணத்தை விட 30 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
இதில் 2-ம் வகுப்பு குளிர் சாதன பெட்டியில் 34 இருக்கைகள், 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் 91, படுக்கைகளும், 3-ம் வகுப்பு முன்பதிவு பெட்டியில் 350 படுக்கைகளும் உள்ளன. இந்த ரயிலில் தட்கல் வசதி கிடையாது. பிரீமியம் தட்கல் வசதி மட்டும் உண்டு. இதற்கான முன்பதிவு இன்றோ அல்லது நாளையோ துவங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிவகாசி வழியாக சபரிமலை செல்வதற்கு மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் பகல் நேரத்திலும், சென்னை - கொல்லம் எக்ஸ்பிரஸ் இரவிலும் தினசரி சேவையில் இயக்கப்பட்டு வருகிறது. எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் இரவு நேரத்தில் செவ்வாய், ஞாயிறு ஆகிய நாட்களில் வாரம் இருமுறை இயக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில், ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயில், தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா, சபரிமலை உள்ளிட்ட ஐயப்பன் கோயில்கள் உள்ளிட்ட பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு எளிதில் சென்று வரலாம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment