Last Updated : 09 Jan, 2018 05:49 PM

 

Published : 09 Jan 2018 05:49 PM
Last Updated : 09 Jan 2018 05:49 PM

கல்யாண வரம் தரும் வள்ளியூர் முருகன்!

கல்யாணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், வாழ்வில் ஒரேயொரு முறை வள்ளியூர் சுப்ரமண்யரைத் தரிசித்தால் போதும்... விரைவில் கல்யாண வரத்தைத் தந்தருள்வார் சுப்ரமண்யர் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!

திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில், சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது வள்ளியூர். இங்கே, குன்றின் மேலே கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசுப்ரமண்யர்! குன்றிருக்கும் இடத்தில் குமரன் இருப்பான். குமரன் இருக்கும் இடத்தில், நமக்கு குறைவே இருக்காது என்பது ஐதீகம்!

மலையைக் குடைந்து, குடைவரைக் கோயிலாகக் கட்டப்பட்ட தலம் இது. சுமார் 1500 வருடங்களுக்கு முந்தைய ஆலயம் என்பதை, கற்களும் கட்டுமானப் பணிகளும் தெரிவிக்கின்றன.

வேலாண்டித் தம்பிரான் சுவாமிகள், அருணாசலம் பிள்ளை ஆகியோர் திருப்பணிகள் மேற்கொண்டதாகத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் உள்ளன. மிகப் புராதனமான, சாந்நித்தியம் நிறைந்த திருக்கோயில் என்று சிலாகிக்கிறார்கள் பக்தர்கள்.

இந்திரன், அகத்திய முனிவர், அருணகிரிநாதர், இடைக்காட்டு சித்தர் ஆகியோர் இங்கு வந்து நெடுங்காலம் தங்கி, ஸ்ரீசுப்ரமண்யரை வழிபட்டு, வரம் பெற்றுள்ளனர் என்கிறது ஸ்தல புராணம். வண்ணச்சரபம் தண்டபாணி தேசிகர் சுவாமிகள், இங்கே உள்ள ஸ்ரீசுப்ரமண்யரின் அழகில், சொக்கிப் போய் மனமுருகி பல பாடல்கள் பாடி அருளியுள்ளார்.

கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை தெப்போத்ஸவம் சிறப்புற நடைபெறுகிறது. அதையொட்டி நடைபெறும் திருக்கல்யாணத்திலும் மாதந்தோறும் சஷ்டி நாளிலும் இங்கு வந்து ஸ்ரீசுப்ரமண்யரை வேண்டினால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது நம்பிக்கை!

மேலும் தை மாதம் வந்து விட்டால், தை மாத செவ்வாய், வெள்ளி , தை மாத சஷ்டி மற்றும் தைப்பூச நன்னாளிலும் இங்கு விரதம் இருந்து வள்ளி மணாளனை, வள்ளியூருக்கு வந்து தரிசிக்கின்றனர். கல்யாண வரம் கைகூடிவரும் என்பது உறுதி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x