Last Updated : 04 Jan, 2018 10:51 AM

 

Published : 04 Jan 2018 10:51 AM
Last Updated : 04 Jan 2018 10:51 AM

துளி சமுத்திரம் சூபி 12: நிரந்தர மகிழ்ச்சி என்னும் மது

 

வறிழைத்து வழுக்கி விழுவதும் குற்றம் புரிவதும் மனிதர்களின் இயல்பு. மிகப் பெரிய ஞானிகளுக்கும் இந்தக் கூற்று பொருந்தும். அந்தச் செயல்களுக்காக வெறுமனே வருந்துவதும் குற்றவுணர்வில் உழல்வதும் ஒருவிதப் பாசாங்குதான். ஏனென்றால், உண்மையான புரிதலும் உணர்தலும் ஒருபோதும் குற்றவுணர்வை ஏற்படுத்தாது. ‘நானா இப்படிச் செய்தேன்? என்னால் எப்படி இந்தக் குற்றச்செயலில் ஈடுபட முடிந்தது?’ என்று நினைப்பதும் வருந்துவதும் நம் அகங்காரத்தின் வெளிப்பாடுதான். உலகில் பலர் தங்கள் வாழ்வை இந்த அகங்காரத்துக்குப் பலி கொடுத்து வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வில் உழன்று மடிவர். ஆனால், வெகுசிலர் தங்கள் திறனின் எல்லைகளையும் குறைகளையும் முழுமனதோடு ஏற்றுக்கொள்வார்கள். அதன்மூலம் அவர்கள் அந்த எல்லைகளிலிருந்து விடுபட்டுத் தங்கள் குறைகளையும் களைவார்கள். அவ்வாறு தன் குறைகளிலிருந்தும் தவறுகளிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு சூஃபி ஞானியானவர்தான் பிஷ்ர் இப்னுல் ஹாரித்.

பிஷ்ர் இப்னுல் ஹாரித் கி.பி.767-ம் வருடம் துர்க்மெனிஸ்தானில் உள்ள மெர்வ் என்ற நகரில் பிறந்தார். ஆனால், அவர் வளர்ந்தது, படித்தது, ஞானம் பெற்றதெல்லாம் பாக்தாத் நகரில்தான். அவர் தன் தாய் வழி மாமா ஷேக் அலியின் சீடராக இருந்து ஞானத்தைக் கற்றார். பிஷ்ர் இப்னுல் ஹாரித் மார்க்கக் கொள்கைகளிலும் அதன் விளக்கங்களிலும் அறிவியலிலும் சிறந்து விளங்கினார். அவர் இன்றும் போற்றப்படும் மிகப் பெரிய சூஃபி ஞானிகளில் ஒருவர். ஆனால், அன்றைய காலகட்டத்தில் மிகப் பெரும் ஆளுமையாகத் திகழ்ந்த அவருடைய ஆரம்ப கால வாழ்வு அதற்கு முற்றிலும் நேரெதிராக இருந்தது.

இளம்வயது கொண்டாட்ட வாழ்க்கை

பிஷ்ர் இப்னுல் ஹாரித். இளம் வயதில் குடி, கேளிக்கைகளில் திளைப்பதை மட்டுமே தன் வாழ்நாள் கொள்கையாக வைத்திருந்தார். தன்னைப் பற்றி எவ்விதப் பிரக்ஞையும் இல்லாமல் எப்போதும் குடி போதையில் மூழ்கி மிதந்தார். அவருடன் சேர்ந்து மிதக்கப் பெரிய நண்பர்கள் கூட்டமும் இருந்தது. சூரியன் மறைவுக்காக அவரது கால்கள் காத்திருக்கும். அது மறைந்தவுடன் அந்தக் கால்கள் அவரை இழுத்துச் சென்று மதுக் கடையில் ஒப்படைத்துவிடும். பின்னிரவுவரை அங்கு அவருக்குக் கொண்டாட்டம்தான். இரவு ஆனவுடன் நண்பர்கள் புடைசூழ வீட்டுக்கு வந்து தன் கும்மாளத்தைத் தொடர்வார். இவ்வாறு குடிபோதையில் அவருடைய நாட்கள் கழிந்துகொண்டிருந்தன. கவலை என்றால் என்னவென்றே அவருக்கு அப்போது தெரியாது. எந்நேரமும் போதையில் மூழ்கியிருப்பவருக்குக் கவலைகள் இருக்குமா என்ன?

ஒரு நள்ளிரவில் மதுக்கடையிலிருந்து வீடு திரும்பும்போது, அவர் கண்களில் பட்ட காகிதத்தைக் கையில் எடுத்தார். அதில் குரானின் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது. அது அவருக்கும் தெரியாது. ஆனால், ஏனோ அதை விட்டெறியாமல் வீட்டுக்குக் கொண்டுவந்தார். வீட்டுக்கு வந்தவர் அந்தக் காகிதத்தைச் சுத்தம்செய்து அதற்கு நறுமணமிட்டு அதைப் பத்திரப்படுத்தி வைத்தார். பின் வழக்கம்போல் நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டார். இரவில் தூங்கும்போது திடீரென்று கனவில் ஒரு குரல், “நீ என் வாசகத்தைச் சுத்தம்செய்ததால் நான் எல்லாத் தீமைகளிலிருந்தும் உன்னை விடுவித்துவிட்டேன். புனிதமடைந்த உன் வாழ்வின் மூலம் இவ்வுலகில் உன் பெயர் என்றும் நிலைத்திருக்கும்” என்று அவர் காதில் ஒலித்தது. பிஷ்ர் இப்னுல் ஹாரித் மெல்ல கண்களைத் திறந்து பார்த்தார். அருகில் யாருமில்லை. இன்று போதை சற்று அதிகமாகிவிட்டது என்று தனக்குத் தானே சொல்லிச் சிரித்தபடி மீண்டும் தூங்க முயன்றார்.

தெரியாதவரை மன்னர்கள்தான்

ஆனால், அந்தக் குரல் அவரைத் தூங்கவிடவில்லை. அவரது போதை தெளியும்வரை அவர் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அவருக்கு என்ன நடக்கிறதென்று புரியவில்லை. முகத்தைக் கழுவியபின் மதுவைத் தேடினார். வீட்டில் மதுக் குப்பிகள் எல்லாம் காலியாக இருந்தன. பணிப்பெண்ணை அழைத்துச் சீக்கிரமாக மது வாங்கி வரச் சொல்லிப் பணித்தார். அந்தப் பெண் கடைக்குக் கிளம்பினாள். அப்போது வீட்டு வாசலில் ஒரு வயதான நபர் நின்றுகொண்டிருந்தார். பணிப்பெண்ணிடம் , ‘உன் எஜமான் நிம்மதியாக மகிழ்ச்சியுடன் உள்ளாரா?’ என்று கேட்டார். அதற்கு அவள் ‘அவருக்கு என்ன, அவர் மகிழ்ச்சியுடன் நிம்மதியாக ராஜா மாதிரி உள்ளார்’ என்று பதில் அளித்தாள். ’ராஜாவா? அது சரிதான். தனக்கு மேல் ஒருவன் உள்ளான் என்று தெரியாதவரை அனைவரும் மன்னர்கள்தான்’ என்று சிரித்தபடி சொன்னார். ‘ஆனால் இன்று உன் எஜமான் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

பேச்சுச் சத்தம் கேட்ட பிஷ்ர் இப்னுல் ஹாரித். மிகுந்த சினத்துடன் அவளை உள்ளே அழைத்து விவரம் கேட்டார். அவள் சொன்னது அவர் சினத்தை மேலும் அதிகரித்தது. ‘நீ கடைக்குச் சென்று மதுவை வாங்கி வா, நான் அந்தக் கிழவனைப் பார்த்துக்கொள்கிறேன்’ என்றார். அவள் சென்றபின், செருப்புகூட அணியாமல் வெறுங்காலோடு அந்த முதியவரைத் தேடி ஓடினார். அவர் கனவில் ஒலித்த குரலும் விடாமல் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஒரு வழியாக அந்த முதியவரைக் கண்டுபிடித்தார்.

பிஷ்ர் இப்னுல் ஹாரித் வழக்கத்துக்கு மாறாக முதன்முறையாக அந்த முதியவரிடம் காரணம் கேட்டார். அவர் சிரித்தபடி ‘முதலை வாய்க்குள் இருக்கிறோம் என்று உணராதவரை நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம். அதை உணர்ந்தவுடன் தப்பிப்பதற்கு ஒரு சிறு போராட்டம் இருக்கும். அதிலிருந்து வெளியே வந்தபின் மீண்டும் மகிழ்ச்சி வரும்’ என்று சொன்னார். ‘இதில் உண்மையான மகிழ்ச்சி எது என்பதை நீயே முடிவு செய்துகொள், ‘தான்’ என்ற அகங்காரம் உன்னை முதலைக்கு இரையாக்கும்’ என்று சொல்லி மறைந்தார். அவர் மறைந்தவுடன் அந்தக் குரல் மீண்டும் அவர் காதுகளில் ஒலிக்க ஆரம்பித்தது. இப்போது அவருக்கு எல்லாம் புரிந்தது. தலையில் அடித்து அழுதபடி மதுக் கடைக்கு ஓடினார். அங்கிருந்த நண்பர்களிடம் இனி நான் இங்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டுக் கடைசியாக அங்கிருந்து வெளியேறினார்.

பின் அங்கிருந்து புறப்பட்டு தாய் மாமனிடம் அடைக்கலம் அடைந்தார். பெரிய ஞானியாகத் திகழ்ந்த அவரிடமிருந்து ஞானம் அனைத்தையும் கற்றார். பிஷ்ர் இப்னுல் ஹாரித் இயற்கையிலேயே மிகுந்த அறிவாற்றல் கொண்டிருந்தார். குரான் முழுவதையும் படித்தார்; பின் அதன் விளக்கங்களைத் தானே விளங்கிக்கொண்டார். அறிவியலையும் கற்றுத் தேர்ந்தார். படித்ததுபோதும் என்று உணர்ந்த பின் கடுமையான துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். துறவு வாழ்வு முடிந்த பின் தான் கற்றதை மக்களுக்குப் போதித்தார். இவரது போதனைகள் பலரது வாழ்வை மாற்றியமைத்தன. பழைய நண்பர்கள் அனைவரும் திருந்தி மறு வாழ்வு கண்டார்கள். ஒழுக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த இவரது வாழ்வு 850-ம் வருடம் பாக்தாத்தில் நிறைவுபெற்றது.

(விடுதலைக்கான தேடல் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x