Published : 07 Dec 2017 10:45 AM
Last Updated : 07 Dec 2017 10:45 AM
எ
ல்லாம் இருந்தும் அவற்றைத் துறந்து அகங்காரத்தை வேரறுத்து மனதை ஆள்பவர் வெகுசிலர். அந்த வெகு சிலரில் ஒருவரான இப்ராஹீம் இப்னு அத்ஹம் அரச வாழ்வைத் துச்சம் எனத் தூக்கி எறிந்து தன்னை சூபி ஞானத்தின் மார்க்கத்தில் செலுத்திக்கொண்டவர்.
ஆப்கானிஸ்தானில் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த இப்ராஹீம் இப்னு அத்ஹம் மிகவும் உயர்வாகக் கொண்டாடப்படும் சூபி ஞானி. பால்க் என்று அப்போது அழைக்கப்பட்ட இன்றைய ஆப்கானிஸ்தானை ஆண்ட அரச குடும்பத்தில் இவர் பிறந்தார். உலகின் அனைத்து வசதிகளும் செல்வங்களும் அதிகாரங்களும் இவரது காலடியில் கிடந்தன. இளவரசர் என்று நாடே இவரைக் கொண்டாடியது. இவர் எங்கே சென்றாலும் தங்க வாள் ஏந்திய நாற்பது வீரர்கள் இவரது முன்னும் பின்னும் செல்வார்கள். ஒரு அரசர் ஆவதற்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் இப்ராஹீம் கற்றுத் தேர்ந்தார்.
வடகிழக்கு பாரசீகம் முழுவதும் இவரது கட்டுப்பாட்டில் இருந்தது. அழகிலும் வீரத்திலும் நிர்வாகத் திறனிலும் குணத்திலும் சிறந்து வழங்கிய இவரை நாடே போற்றியது. ஒரு நாள் இரவு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது தூங்கும் அறையின் மேற்கூரையில் யாரோ ஓடும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு முழித்தார். அருகில் இருந்த வாளைக் கையில் எடுத்துக் கொண்டு ‘யாரங்கே மேலே?’ என்று சத்தமாகக் கேட்டார். ‘பயம் வேண்டாம் அரசனே, நான் உங்கள் நண்பன்’ என்று பதில் வந்தது. ‘மூடனே, எனக்கு என்ன பயம்?’ என்று கேட்டார். ‘கையில் இருக்கும் வாளின் அர்த்தம் என்ன மன்னனே?’ என்னும் கேள்வி இவருக்குப் பதிலாக வந்தது.
வந்து செல்லும் சத்திரம்
எரிச்சலடைந்த இப்ராஹீம், ‘மேலே என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?’ என்று சினத்துடன் கேட்டார். ‘தொலைந்துபோன என் ஒட்டகத்தை மேலே தேடிக்கொண்டிருக்கிறேன் மன்னா’ என்று பதில் வந்தது. ‘முட்டாள்! ஒட்டகம் எப்படிக் கூரையின் மேல் இருக்கும்?’ என்று இவர் கேட்டார். ‘ஏன் மன்னா, தங்க மாளிகையில் அமர்ந்து வீரத்தை வாளிலும் பாதுகாப்பை அரணிலும் ஆட்சியை அதிகாரத்திலும் மகிழ்ச்சியை செல்வத்திலும் தேடி நீங்கள் நிம்மதியை நாட முயலும்போது நான் ஒட்டகத்தை மேலே தேடக் கூடாதா?’ என்ற பதில் கேள்வியுடன் அந்தக் குரல் மறைந்தது.
இப்ராஹீம் இரவு முழுவதும் தூங்கவில்லை. அந்தக் கேள்விகள் அவர் செவிப்பறைகளில் மோதிக்கொண்டே இருந்தன. சூரியன் உதித்துவிட்டது. கடமை அரசவைக்கு அழைத்தது. மனக் குழப்புத்துடன்தான் அன்றைய அலுவல்கள் கடந்தன. அப்போது அரசவையில் திடீரென்று பரபரப்பு ஏற்பட்டது. பார்க்கவே பயங்கரமாகத் தோற்றமளித்த ஒரு மனிதன் பாதுகாப்பு வளையத்தை மீறி உள்ளே வந்தான். அவனைத் தடுத்துக் கேள்வி கேட்கப் பயந்து அனைவரும் ஒதுங்கி நின்றனர். அவன் நேராக இப்ராஹீமின் முன் வந்து நின்றான்.
‘யார் நீ, என்ன வேண்டும் உனக்கு?’ என்று துளியும் பயம் இல்லாமல் கம்பீரமாக இப்ராஹீம் கேட்டார். ‘நான் ஒரு வழிப்போக்கன். இங்கு ஓய்வெடுக்க வந்துள்ளேன்’ என்று அவன் சொன்னான். ‘இது ஒன்றும் சத்திரம் இல்லை. இது என்னுடைய மாளிகை. உன் தலை துண்டாகி பூமியைத் தொடும் முன் இங்கிருந்து ஓடிவிடு’ என்று இப்ராஹீம் கட்டளையிட்டார். அவன் துளியும் பதற்றமடையவில்லை. ‘நீங்கள் எப்போதிருந்து இங்கு வசிக்கிறீர்கள்?’ என்று அவன் கேட்டான். ‘நான் பிறந்ததே இங்குதான்’ என்று இப்ராஹீம் சொன்னார். ‘அப்படியானால் உங்களுக்கு முன்பு இங்கு யாரிருந்தார்கள்?’ என்று கேட்டான்.
‘என் தந்தை’ என்று இவர் சொன்னார். ‘அவருக்கு முன்பு’ என்று அவன் கேட்டான். ‘என் தாத்தா’ என்று இவர் சொன்னார். ‘அவருக்கும் முன்’ என்று மீண்டும் கேட்டான். ‘என் தாத்தாவின் தந்தை, அவருக்கு முன் அவரின் தந்தை என்று என் மூதாதையர்கள் அனைவரும் வாழ்ந்த இடம் இது’ என்று இப்ராஹீம் பெருமையுடன் சொன்னார். ‘அவர்கள் எல்லாம் இப்போது எங்கே?’ என்று மீண்டும் அவன் கேட்டான். ‘அவர்கள் மரித்து விட்டார்கள்’ என்று இப்ராஹீம் சற்று வருத்தம் தொனிக்கும் குரலில் சொன்னார். ‘அப்படியானால் வருவதும் தங்குவதும் போவதுமாக இருக்கும் இந்த இடத்தைச் சத்திரமென்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?’ என்று கேட்டவாறு அவன் மறைந்தான்.
காதில் ஒலித்த குரல்
என்ன நடந்தது என்பது புரியவில்லை. கோவையாகச் சிந்திக்கவும் முடியாமல் குழம்பினார். ஏதோ ஒன்று புரிந்தும், புரியாததுபோல் அவருக்குத் தோன்றியது. ஈடுபாடு எதிலும் இல்லாமல் போனது, இப்ராஹீம் தூங்க முயன்றபோது, ‘இன்னுமா நீ விழிக்கவில்லை? விழித்துக்கொள்’ என்று இவரின் மனதிடம் ஒரு நெருங்கிய குரல் சொல்வதுபோல் தோன்றியது. விழித்துக்கொள் என்ற அந்த வாக்கியம் இவர் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.
அன்றைய இரவு தூங்காமல் விடிந்தது. கடமை மீண்டும் அவரை அரசவைக்கு அழைத்தது. ஆனால், மாறுதல் தேவையென உணர்ந்த இப்ராஹீம் தன் வீரர்களுடன் வேட்டைக்குச் சென்றார். ஆனால், ‘விழித்துக்கொள்’ என்ற குரல் இவரை விடாமல் துரத்தி வேட்டையாடிக்கொண்டேயிருந்தது. இந்தக் குழப்பங்களுக்கு நடுவில் இப்ராஹீம் பாதை விலகி படைவீரர்களிடமிருந்து தனிமைப்பட்டார். அப்போது அவர் எதிரில் ஒரு மான் தென்பட்டது. மிகுந்த மகிழ்ச்சியுடன் குதிரையின் மேல் இருந்தவாறு அதன் மேல் அம்பைக் குறிவைத்தார்.
வேட்டையாட வந்த மான்
‘என்னை வேட்டையாட நீ வரவில்லை, உன்னை வேட்டையாட நான் வந்துள்ளேன்’ என்று சொல்லி அந்த மான் மறைந்தது. தான் மானைப் பார்த்தது நிஜம்தானா என்று குழம்பினார். ‘இன்னுமா உனக்குப் புரியவில்லை’ என்று ஒரு குரல் காதில் ஒலித்தது. அந்தத் தருணத்தில் இப்ராஹீம் அனைத்தையும் உணர்ந்தார். குதிரையிலிருந்து இறங்கி அதற்கு முத்தமிட்டு அதைச் சுதந்திரமாக அனுப்பிவைத்தார். தன் எதிரில் வந்த ஒரு மேய்ப்பனிடம் தன் உடையைக் களைந்து கொடுத்தார். பதிலுக்கு அவன் உடையை வாங்கி அணிந்துகொண்டு பாலைவனத்துக்குள் தலைமறைவானார். அங்கு ஒரு குகையினுள் அமர்ந்து தொண்ணூறு நாட்கள் தனித்திருந்து கடுமையான நோன்பைக் கடைப்பிடித்து முழுமையான இறை வழிபாட்டில் ஈடுபட்டார்.
அதன் பின் அங்கிருந்து வெளிவந்து கால்நடையாகவே சிரியாவுக்குச் சென்றார். அங்கு மீதமிருந்த தன் வாழ்வை ஒரு சாமானியனைப் போல் வாழ்ந்தார். அவருக்குப் பிச்சை எடுப்பது பிடிக்காது. எனவே, கிடைக்கும் வேலையைச் செய்து ஒரு வாரத்துக்குத் தேவையான உணவை வாங்கிக்கொள்வார். அதில் பாதியை வறியவர்களுக்குக் கொடுப்பார். பின் ஒரு வாரம் பிரார்த்தனையில் ஈடுபடுவார். ‘கடவுளை முழுமனதுடன் நம்புங்கள். இல்லையென்றால் அவர் அளிக்கும் உணவு எதையும் உண்ணாதீர்கள். அவரது எல்லைக்கு அப்பால் அவரால் பார்க்க முடியாத இடத்துக்குச் சென்று அவரை நம்பாமல் உங்கள் இஷ்டம் போல் வாழுங்கள்’ என்று சொன்ன இந்த முன்னாள் இளவரசன் தன் மனதின் அரசனாக 782-ம் வருடம் சிரியாவில் மறைந்தார்.
(ஞானிகள் தொடர்ந்து வருவார்கள்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT