Published : 20 Nov 2023 06:00 AM
Last Updated : 20 Nov 2023 06:00 AM
திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நிறைவாக நேற்று நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கடந்த 14-ம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது.
இவ்விழாவில், நாள்தோறும் சுப்பிரமணிய சுவாமி, புஷ்ப அலங்காரம், திருவாபரண அலங்காரம் உள்ளிட்ட அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதுமட்டுமல்லாமல், கடந்த 14-ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை, கோயில் காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப் பெருமானுக்கு லட்சார்ச்சனை விழா, வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும், மாலை வேளையில் இசைக் கச்சேரி, பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வந்த இந்த விழாவின் முக்கிய நிகழ்வான புஷ்பாஞ்சலி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
இந்நிலையில், கந்தசஷ்டி விழாவின் நிறைவாக நேற்று காலை காவடி மண்டபத்தில் உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் கல்யாண சீர்வரிசைகளுடன் கோயில் அலுவலகத்திலிருந்து காவடி மண்டபத்துக்கு வந்தனர். தொடர்ந்து, உற்சவர் முருகனுக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருத்தணி, அரக்கோணம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT