Published : 01 Jan 2018 09:50 AM
Last Updated : 01 Jan 2018 09:50 AM
சிறப்பாகவும் விமரிசையாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது சிதம்பரம் ஆருத்ரா தரிசனப் பெருவிழா. கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் விழாக்கோலம் பூண்டிருக்கும் நடராஜர் கோயிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, இன்று ஜனவரி 1ம் தேதி நடைபெற்றது திருத்தேரோட்டம்.
நாளை திருவாதிரை தினம். ஆருத்ரா தரிசனப் பொன்னாள். இந்த நாளில், தில்லையம்பலத்தான் குடிகொண்டிருக்கும் ஆலயத்தையும் அதன் மகிமையையும் அறிவோம்.
கோயில் என்று வைணவர்கள் ஸ்ரீரங்கத்தைச் சொல்வார்கள். அதாவது கோயில் என்ற பொதுப்பெயர் என்றாலே அது ஸ்ரீரங்கம்தான். அதேபோல், கோயில் என்று சைவர்கள் சொல்வது சிதம்பரம் கோயிலை என்கிறார்கள் சரித்திர ஆய்வாளர்கள்.
பஞ்ச பூத தலங்கள் தெரியும்தானே! நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூத தத்துவத்தை எடுத்துரைக்கும் கச்சி (அல்லது) ஆரூர், திருஆனைக்கா, திருவண்ணாமலை, திருக்காளத்தி, தில்லை என்ற கோயில்கள் வரிசையில் திகழும் தில்லையம்பதி, சிதம்பரம் என வரிசைப்படுத்துகிறது புராணம்!
சிதம்பரம் என்பது பிரபஞ்சப் பெருவெளியையும், சிதாகாசம் எனும் ஞானவெளியையும் குறிக்கிறது. அம்பலத்தில் ஆடுகிறவனாகக் காட்சியளிக்கும் நடேச மூர்த்தியின் திருவடிவத்தில் காணப்படும் கமல பீடமும் மகர வாயும், நிலம் எனும் பூதத்தையும், பரமனின் சடையில் ஒடுங்கிக் கிடக்கும் கங்காதேவி, நீரையும்; பெருமானின் இட மேற்கரத்தில் திகழும் எரியகல் (தீச்சுடர்), நெருப்பையும்; கூத்தனின் விரிசடை, பறக்கும் காற்றின் வேகத்தையும்; தீச்சுடர்களோடு திகழும் பிரபை ஆகாசத்தையும் நம் முன் நிறுத்தும் குறியீடுகள்! இவை அனைத்தையும் நாம் ஒருங்கே தரிசிக்கக்கூடிய தலமான தில்லையம்பதியின் நான்கு கோபுரங்களையும் சிற்பசாகரம் என்றே வர்ணிக்கலாம்!
முதலாம் ராஜராஜன் காலத்தில் தில்லைப் பெருங்கோயில் எப்படி இருந்தது என்பதை தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஓவியக் காட்சியாகக் காட்டியுள்ளான். பொன்னம்பலமும் பிற கோயில்களும், திருச்சுற்றுமாளிகையும், கோபுரங்களும் அந்தக் காலகட்டத்தில் எவ்வாறு திகழ்ந்ததோ, அவ்வாறே ஓவியங்களாகத் தீட்டி வைத்தான்!
1000 ஆண்டுகளுக்கு முன்பு, தில்லையில் இன்றைக்கு நாம் காணும் ஏழு நிலைக் கோபுரங்கள் இல்லை. மாறாக திருச்சூர், இருஞ்சாலக்குடா போன்ற கேரளத்துக் கோயில்களில் இடம்பெறும் மரவேலைப்பாடுகளுடன் ஓடுகள் வேயப்பட்ட சேரர் காலப் பாணியில் அமைந்த கோபுரங்களே இருந்தன. தில்லையில் முதன்முதலாக ஏழு நிலைக் கோபுரமாக மேற்குக் கோபுரத்தை இரண்டாம் குலோத்துங்கச் சோழன் எழுப்பினான். அடுத்து கோப்பெருஞ்சிங்கன், கிழக்கு மற்றும் தெற்குக் கோபுரங்களைக் கட்டினான். ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் தெற்குக் கோபுரத்தைப் புதுப்பித்தான். விஜயநகர கிருஷ்ணதேவராயர் வடக்குக் கோபுரத்தை எழுப்பினார்.
பல்வேறு காலகட்டங்களில், ஏழு நிலைகளைக் கொண்ட தில்லைக் கோபுரங்கள் கட்டப்பட்டிருந்தாலும், அந்தக் கோபுரங்களில் காலத்தால் முதற்படைப்பாக விளங்கும் மேற்குக் கோபுரத்தில் எவ்வாறு சிற்பங்களை இடம் பெறச் செய்தார்களோ, அதேமுறையை பிறகு அங்கு எடுக்கப்பட்ட மூன்று கோபுரங்களிலும் பின்பற்றினார்கள். ஆகவே, திட்டமிட்ட செயல்பாட்டுடன் கோயிலின் எல்லாக் கோபுரங்களும் ஒருசேர அழகு காட்டி நிற்பது ஆச்சரியம்தான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT