Published : 12 Nov 2023 12:07 PM
Last Updated : 12 Nov 2023 12:07 PM

தீபாவளி கொண்டாட்டம் - கோயில்களில் சிறப்பு வழிபாடு

கோப்புப்படம்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து மக்கள் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தீபாவளியையொட்டி தமிழக கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் : தீபாவளி பண்டிகையையொட்டி, இன்று காலை 7 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 7 மணி வரையிலும் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் மற்றும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டும், சுந்தரேஸ்வரருக்கு வைர நெற்றிப் பட்டை அணிவிக்கப்பட்டும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பண்டிகை தினத்தையொட்டி சிறப்பு தீபாராதனையும் காட்டப்பட்டது.

தீபாவளி பண்டிகையையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரரை காலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டு சென்றனர். இதேபோல், மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில், பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், அழகர் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் நடந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில்: திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலின் மாணிக்க விநாயகர் சன்னதியில் இன்று காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மாணிக்க விநாயகர் மற்றும் மலைக்கோட்டையில் உள்ள உச்சப் பிள்ளையார் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மேலும், திருச்சி ஸ்ரீரங்கம், உறையூர், திருவாணைக்காவல் உள்ளிட்ட கோயில்களிலும் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தஞ்சை பெருவுடையார் கோயில், கோவை ஈச்சனாரி விநாயாகர் கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், சென்னை வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து பிரசித்திப் பெற்ற கோயில்களிலும் தீபாவளி பண்டிகையையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜைகளும் தீபாராதனைகளும் காட்டப்பட்டன. இந்த சிறப்பு வழிபாடுகளில் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வழிபட்டுச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x