Published : 02 Jan 2018 03:20 PM
Last Updated : 02 Jan 2018 03:20 PM
தியாகப் பிரம்மம் என்று போற்றப்படும் தியாகராஜ சுவாமிகளுக்கு, கோலாகலமாக இன்று நடக்கிறது ஆராதனை விழா. தஞ்சாவூர்ப் பக்கம் உள்ள திருவையாறில், இன்று தேர்க்கூட்டம் திருவிழாக் கூட்டம் என களைகட்டியிருக்கிறது திருவையாறு!
இசை, பக்தி, வேதம் என நாட்டம் கொண்டிருந்த தியாகராஜனுக்கு 18வது வயதில் நடந்தேறியது திருமணம்! ஆனாலும் இவரின் தேடலும் ஞானமும் இசையிலும் ஸ்ரீராம பக்தியிலுமே இருந்தது. ஒரே ராகத்தில் பல கீர்த்தனைகளை இயற்றிப் பாடினார். எல்லோரும் வியந்தார்கள். நெகிழ்ந்தார்கள். மகிழ்ந்தார்கள். மனமுருகினார்கள்.
அபூர்வ ராகங்கள் பலவற்றை உண்டுபண்ணி, அதிலும் கீர்த்தனைகளைப் பாட, அனைவரும் அதிசயித்தார்கள். ஆச்சரியப்பட்டுப் போனார்கள். நெக்குருகி பாடலில் மூழ்கினார்கள்.
தியாகபிரம்மத்தின் திறனும் ஞானமும் தஞ்சாவூரை ஆட்சி செய்த சரபோஜி ராஜாவின் காதில் விழாமல் இருக்குமா? அரசவைக்கு அழைத்தார். ‘மன்னரின் புகழ் பாடுங்கள். ஏராளமான செல்வங்களைப் பெற்றுச் செல்லுங்கள்’ என்றார்கள்.
‘என் ஸ்ரீராமருக்கு முன்னே, பொன்னாவது பொருளாவது? அவரைத் தவிர மனிதர்களைப் பாடமாட்டேன்’ என்று புறக்கணித்தார்.
அவர் பாடிய பாடல்களில் ‘நிதி சால சுகமா’ என்று கல்யாணி ராகத்தில் இவர் பாடிய பாடல் இன்றைக்கும் உருக்கியெடுத்து விடும் நம்மை! எவர் பாடினாலும் மெய்ம்மறந்துவிடுவோம்.
பக்தியையும் இசையையும் ஒன்றாகவே பாவித்தார் தியாகய்யர்!
இத்தனை பெருமைகள் கொண்ட தியாகய்யர் எனும் மகானுக்குத்தான் இப்போது திருவையாறில் ஆராதனை வைபவம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது!
இசை மேதையை வணங்குவோம். அவரின் இசையைப் பாடியும் கேட்டும் போற்றுவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT