Published : 17 Apr 2014 10:54 AM
Last Updated : 17 Apr 2014 10:54 AM
அது ஒரு இறுதிப் பயணம் என்று தான் ரோம ராஜாங்கமும், யூத மதகுருக்களும், மூப்பர்களும் எண்ணினார்கள். அப்போதெல்லாம் சிலுவை என்பது ஒரு அவமானச் சின்னம். சிலுவையில் மரிப்பது மிக இழிவான ஓன்று.
ரோமானியர்களின் அடிவருடிகளாய்க் கிடந்த யூதர்களுக்கென்று விடுதலை விடியலைச் சுமந்து வந்த தேவமைந்தன் அவரே என்று நம்பித்தான் யெருசலேம் நகருக்குள் ஓசன்னா கீதம் பாடி அவரை அழைத்துப் போனார்கள்.
ஆனால் இப்போதோ பழியையும் பாரமான சிலுவையையும், இயேசு சுமந்தபடி தான் நேசித்த அதே யூதர்கள் தரும் கசையடிகளின் காயத்தோடும் கண்ணீர் வற்றிய கண்களோடும் கல்வாரி மலைநோக்கித் தன் இறுதிப் பயணத்தைத் துவக்குகிறார்.
அதற்கு முன்னால் தலைமைக் குரு இயேசுவை விசாரித்தார். இயேசு அவரைப் பார்த்து “நான் உலகறிய வெளிப்படையாகப் பேசினேன். யூதர் அனைவரும் கூடிவரும் தொழுகைக்கூடங்களிலும், கோவிலிலும்தான் எப்போதும் கற்பித்து வந்தேன். நான் மறைவாக எதையும் பேசியதில்லை. ஏன் என்னிடம் கேட்கிறீர்? நான் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் கேட்டுப்பாரும். நான் என்ன சொன்னேன் என்று அவர்களுக்குத் தெரியுமே'' என்றார்.
அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர்,'' தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்'' என்று சொல்லி அவர் கன்னத்தில் அறைந்தார். இயேசு அவரிடம்,'' நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்ன வெனக் காட்டும். சரியாக பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?'' என்று கேட்டார்.
தன் துயரத்தின் அடர்த்தியும் மரணத்தின் தூரமும் அவருக்குத் தெரியாத ஒன்றல்ல. ஆனால் துரோகத்தின் வித்து யூதாசின் முத்தத்தில் புதைந்து கிடக்கிறது என்று அறிந்தபோதுதான் துடித்துப் போயிருப்பார். முப்பது வெள்ளிக் காசில் யூதாசும் யூதர்களும் துவக்கிய ஒரு துரோக வரலாறு இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் அந்த ஒற்றை முத்தத்தோடு முடிந்துபோகும் என்று தான் வஞ்சகர்கள் நினைத்தார்கள். புனிதத்தின் வரலாறு அங்கேதான் ஆரம்பமாயிற்று. ஆனால் பணப்பித்தால் பச்சைத் துரோகம் என்னும் பாவத்தைச் செய்தோமே என்னும் மனசின் உந்துதலால் ''மாசற்ற ரத்தத்தைக் காட்டிக் கொடுத்தேனே'' என்று சொல்லி யூதாசு தானே தன் மரணத்தைத் தழுவிக்கொண்டான்.
மாசற்ற மனிதன் என்று தனது மனசுக்குள் தீர்ப்பெழுதிவிட்டு, மதகுருக்களின் கோரப்பிடியிலிருந்து இயேசுவை விடுவிக்க நினைத்த அரசன் பிலாத்துவும் யூதர்களின் துரோக வெறிக்கு முன்னால் தோற்றுப்போனவனாய்க் கைகழுவிவிட்டான். கொலைகாரனும் கள்வனுமான பாரபாசுக்கு கருணை காட்டத்துணிந்த யூதர்கள் தங்கள் இரட்சகனுக்கு முள்முடி சூட்டி வேடிக்கை பார்த்தார்கள்.
தன் போதனையைக் கேட்க வந்த மக்களைப் பசியோடு அனுப்பினால் போகிற வழியில் சோர்ந்துபோவார்களே என்று எண்ணி அப்பமும் மீனும் அள்ளித்தந்த கருணையின் தேவன் இயேசு. இதோ அந்த வலுவற்ற திருக்கரங்களிலும் நலிவுற்ற இரு கால்களிலும் கூரிய ஆணிகளால் துளைத்து அவரே சுமந்து வந்த பழுவான சிலுவையோடு அறைந்து மகிழ்ந்தார்கள், மதகுருக்கள் என்ற மரண வியாபாரிகள்.
கானாவூர் திருமணத்தின் போது ரசம் தீர்ந்து போனதை அவரது தாய் மரியாள் சொன்னபோது “என் வேளை இன்னும் வரவில்லையே, அம்மா!” என்று சொல்லிய பின்னும் தன் இறை வல்லமையால் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய அதே மனுமகன் மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டு “தாகமாயிருக்கிறது” என்று வறண்டு போய்விட்ட தன் நாவசைத்து கேட்டபோது கூட கசப்புக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள், யூதர்கள்.
இதோ! நிலத்திற்கும் மேலே, நீல வானுக்கும் கீழே மனிதம் போற்றி, மானுடம் நேசித்த மகத்தான இறைமகன் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார், காயங்கள் வழியாய் இரத்தம் கசிய, இரு கள்வர்கள் நடுவில், கசிந்த உதிரமும் காய்ந்து போக, பெற்ற தாயும், ஒற்றைச் சீடரும் சூழ்ந்து நிற்க, துயரத்தின் உச்சத்தில் நின்றபடி அவர் சொன்னார்: “பிதாவே! இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்கு தெரியவில்லை”.
ஆம்! “உன் மேலாடையைப் பறிக்க நினைப்பவனுக்கு உன் உள்ளாடையையும் கொடு, உன் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு, உன்னைச் சபிப்பவனுக்காகவும் மன்றாடு” என்று தான் போதித்தபடியே சிலுவை மரத்திலும், இயேசு சாதித்துக்காட்டிவிட்டார். உலகம் அவரைத் தொழுகிறது என்பது உண்மை! ஆனால் உண்மையில் அவருக்காக அழுகிறதா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT