Published : 31 Jan 2018 09:48 AM
Last Updated : 31 Jan 2018 09:48 AM
பழநியில் பத்துநாட்கள் நடைபெறும் தைப்பூசவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (31.1.18) காலை நடைபெற்றது. வழக்கமாக மாலையில் நடைபெறும் தேரோட்டம், 60 ஆண்டுகளுக்கு பிறகு தை பவுர்ணமி அன்று சந்திரகிரகணம் வருவதால் காலையில் மாற்றியமைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஜனவரி 25 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. தினமும் வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா வாகனங்களில் ரதவீதிகளில் சுவாமி உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் ஆறாம் நாளான நேற்று இரவு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. மணக்கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளித்தேரில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி வலம் வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. வழக்கமாக தை மாதம் பவுர்ணமி அன்று மாலை 4.30 மணிக்கு தைப்பூச விழா தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு சந்திரகிரகணம் ஏற்படுவதால் தேரோட்டம் நேரம் காலையில் மாற்றப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கு பிறகு இந்தநிகழ்வு நடைபெறுகிறது. முத்துக்குமாரசுவாமி, வள்ளி,தெய்வானையுடன் தேரில் ரதவீதிகளில் வலம்வந்தார்.
முன்னதாக சண்முகநதியில் சுவாமி எழுந்தருளி தீர்த்தம்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து தேரோட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்கு ரதவீதிகளில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தைப்பூசத்தை முன்னிட்டும் தேரோட்டத்தை முன்னிட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT