Published : 28 Oct 2023 06:02 AM
Last Updated : 28 Oct 2023 06:02 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோயில் மற்றும் சூரியலிங்கம், சந்திரலிங்க கோயில் என 10 கோயில்களில் கடந்த 19 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலையில் ‘மலையே மகேசன்' என போற் றப்படும் திரு அண்ணாமலையை பக்தர்கள் கிரிவலம் வந்து வழி படுகின்றனர். இந்த கிரிவலப் பாதையில் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், நிருதிலிங்கம், எமலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசான்யலிங்கம் என அஷ்டலிங்க கோயில்கள் உள்ளன. மேலும், சூரியலிங்கம், சந்திரலிங்க கோயில்களும் உள்ளன.
இக்கோயில்கள் புனரமைக் கப்பட்டு, விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் கடந்த அக்.26-ம் தேதி காலை குடமுழுக்கு விழாவுக்கான சிறப்பு யாகங்கள் தொடங்கின. இதற்காக, அஷ்டலிங்கங்கள் (8 கோயில்) உட்பட 10 கோயில்கள் அருகே யாக சாலை அமைக்கப்பட்டிருந்தன. மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், முதல் கால யாகபூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.
இதையடுத்து, 2-ம் கால யாக பூஜை நேற்று நடைபெற்றது. பின்னர் வேத மந்திரங் களை சிவாச்சாரியார்கள் முழங்க, மங்கல இசை ஒலிக்க, ஒவ்வொரு கோயிலில் அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் இருந்து புனித நீர் நிரப்பப்பட்டிருந்த கலசங்களின் புறப்பாடு இருந்தது.
இதைத்தொடர்ந்து, இந்திர லிங்க கோயிலில் உள்ள கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மேலும், அக்னிலிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசான்யலிங்கம், சூரியலிங்கம் மற்றும் சந்திரலிங்க கோயில்களில் உள்ள மூலவர் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. 10 கோயில்களில் உள்ள நந்திக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு, ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT