Last Updated : 02 Jan, 2018 12:26 PM

 

Published : 02 Jan 2018 12:26 PM
Last Updated : 02 Jan 2018 12:26 PM

திருவாதிரை நாயகன்!

இப்போது சிதம்பரம் என்றால்தான் தெரியும். தில்லையம்பதி எனப் போற்றப்படுகிறது சிதம்பரம். புலிக்கால் முனிவர் என்ற வியாக்ரபாதருக்கும், ஆதிசேஷனின் அவதாரமான பதஞ்சலி முனிவருக்கும் தைப்பூசத் திருநாள் அன்று தில்லையில் இறைவன் ஆனந்த நடனத் திருக்காட்சி அளித்தான் எனச் சொல்கிறது புராணம்!

அவர்களுக்குக் காட்சியளித்த அன்று தொடங்கி, இன்றளவும் இறைவன் அங்கே ஆனந்தத் தாண்டவ மூர்த்தியாய் எழுந்தருளி ஆன்மாக்களுக்கு அருள் வழங்கி வருகிறான்.

இரண்டு முனிவர்களுக்கும் இறைவன் காட்சியளித்த இடம் சித்சபை எனப்படுகிறது. இதுவே ’திருச்சிற்றம்பலம்’ என்பதாக விவரிக்கின்றன புராணங்கள். இங்குதான் நடராஜர் எழுந்தருளியுள்ளார். இதன் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. சிறு & அம்பலம் என்பதே சிற்றம்பலம். சிறிய வெளி என்று பொருள். அம்பலம்- என்றால் வெளி, ஆகாயம்.நமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டைவிரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும் கடோபநிஷத் விவரிக்கிறது!

அந்த ஆன்மாவுக்குள் ஆன்மாவாய் இறைவன் ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருப்பதாய் சிவாகமங்கள் கூறுகின்றன. அந்தச் சிறு வெளியை நம் சாஸ்திரங்கள் ‘தகர ஆகாயம்’ எனக் குறிப்பிடுகின்றன. தகரம் என்றால் சிறுமை. ஆகாயம் என்பது வெளி. இதுவே தமிழில் ‘சிற்றம்பலம்’ எனப்படுகிறது. இதனை நம் போன்றோர் உணர்ந்து வழிபட்டு உய்வதற்காக தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்காட்சி தந்தார் என்கிறது ஸ்தல புராணம் என்கிறார் சிதம்பரம் வெங்கடேச தீட்சிதர்!

எல்லா சிவாலயத்திலும் கருவறையில் சிவலிங்கம் காணப்படும். அந்தக் கருவறையைச் சுற்றி தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேசர், நடராஜர், பைரவர், பிட்சாடனர் ஆகியோர் வீற்றிருப்பர். ஆனால் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்தில் ஆடல்வல்லானே முதல் மூர்த்தியாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறார். சிவலிங்க மூர்த்தியான திருமூலநாதர் சித்சபைக்குப் பின்புறம்தான் எழுந்தருளியிருக்கிறார்.

இங்கே, சிதம்பரத்தில் திருவாதிரை திருவிழா இன்று விமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது.

ஆடல்வல்லானே சரணம்... நடராஜர் பெருமானே உன் திருவடி சரணம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x