Published : 26 Oct 2023 04:02 AM
Last Updated : 26 Oct 2023 04:02 AM
சேலம்: சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று யாகசாலை பூஜை தொடங்கியது.
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நாளை (27-ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி, கடந்த 18-ம் தேதி புதிய கொடி மரம் நடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் புனித தீர்த்தக்குடம் மற்றும் முளைப் பாரி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, நேற்று கும்பாபிஷேகத்துக்காக கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட யாக சாலையில் 23 யாக குண்டம் மற்றும் 16 கலசங்கள் வைக்கப்பட்டு, வேத, மந்திரங்கள் முழங்கிட யாக சாலை பூஜை தொடங்கியது. நேற்று மாலை 6 மணிக்கு சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு, கணபதி வழிபாடு, புண்யாக வாசனம், பூதசுத்தி, கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாக சாலை பிரவேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
இரவு 10 மணிக்கு முதல்கால பூர்ணாஹுதி, சதுர்வேத பாராயணம், தமிழ் முறை ஓதுதல், மகா தீபாராதனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப் பட்டது. நாளை அதிகாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை நான்காம் கால வேள்வி வழிபாடும், காலை 7.40 மணி முதல் காலை 8 மணி வரை ராஜகோபுரம், கருவறை விமானம், பரிவார சந்நிதி விமானம் மற்றும் கொடி மரத்துக்கு சமகாலத்தில் கும்பாபிஷேகமும், காலை 8.30 மணி முதல் மகா கணபதி, பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.
தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதான பிரசாத விநியோகம் செய்யப்படுகிறது. நாளை மறுநாள் மாலை தங்கரதம் புறப்பாடு நடைபெறுகிறது. கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
போக்குவரத்து மாற்றம்: கும்பாபிஷேக விழாவையொட்டி, சேலம் பட்டைக்கோயிலில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் இரண்டாவது அக்ரஹாரம், டவுன் ரயில் நிலையம், திருவள்ளுவர் சிலை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கோயிலை சுற்றிலும் மாநகர காவல் துறை மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT