Published : 19 Oct 2023 01:13 PM
Last Updated : 19 Oct 2023 01:13 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயில் வளாகத்தில் இந்த ஆண்டு தீபத் திருவிழா தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரிஷப், இந்து சமய அறநிலைய துறை மண்டல இணை ஆணையர் சுதர்ஷன், கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ‘‘அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழா வரும் நவ. 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. நவ. 26-ம் தேதி மகா தீபத் திருவிழா நடைபெறவுள்ளது. இந்தாண்டு தீபத் திருவிழாவுக்கு 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நகராட்சி சார்பில் 13 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். கிரிவலப்பாதை மற்றும் நகரப்பகுதிகளில் சாலை பணிகள், தூய்மைப் பணிகள், குடிநீர் வசதி உள்ளிட்டவைகளை மேம்படுத்துவது குறித்து முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.
இந்தாண்டு காவல் துறை பாதுகாப்பு பணியில் 13 ஆயிரம் பேர் ஈடுபடுவார்கள். சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்குவது, தீப விழா அன்று மலை மீது ஏறுவதற்கு அனுமதி சீட்டு வழங்குவது, அன்னதானம் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும். கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் மருத்துவ குழுக்கள் அமைக்க வேண்டும். ஆம்புலன்ஸ் சேவை, மீட்பு பணிகளுக்கு தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கோயில் சார்பில் தூய்மைப் பணிகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
சுவாமி மாட வீதியுலா நடைபெறும் நாட்களில் 11 இடங்களில் தற்காலிகமாக கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். கிளிகோபுர நுழைவு வாயிலில் ‘ஸ்கேனிங்’ இயந்திரம் மூலம் பொருட்களை சோதனை செய்ய வேண்டும். கிழக்கு ராஜகோபுரம், தெற்கு ராஜகோபுரம், வடக்கு ராஜகோபுரம் நுழைவு வாயில்களில் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி மூலம் சோதனை செய்ய வேண்டும். தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா வரும் நவ. 23-ம் தேதி நடைபெறும்.
தேரோட்டத்துக்கு முன்பாக தேர்களின் பாதுகாப்பு உறுதிச்சான்று பெற வேண்டும். தீப விழா முடிந்ததும் வரும் நவ. 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை 3 நாட்களுக்கு தெப்பல் உற்சவம் நடைபெறவுள்ளது. தீபத் திருவிழா அன்று மலை மீது ஏற்றப்படும் தீப கொப்பரை அருகில் நின்று புகைப்படம் எடுத்து வாட்ஸ்-அப், பேஸ்புக்-ல் வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். அதனை அறவே தடுக்க வேண்டும்’’ என்று முடிவெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment