Published : 19 Oct 2023 04:08 AM
Last Updated : 19 Oct 2023 04:08 AM
புதுச்சேரி: புதுவையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை வரவேற்க பாரம்பரிய முறைப்படி, நட்சத்திர உணவகங்களில் கேக் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
புதுவையில் உள்ள நட்சத்திர உணவகங்களில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விடுமுறையை கருத்தில் கொண்டும், புத்தாண்டை வரவேற்கவும் கேக் தயாரிக்கும் பணிஅக்டோபரில் மும்முரமாக நடைபெறும். 45 நாட்கள் ஊற வைக்கப்பட்டு கேக் தயாரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வழங்குவதை நட்சத்திர உணவகங்கள் வழக்கமாக கொண்டுள்ளன.
இதையொட்டி பாரம்பரிய முறைப்படி கேக் தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக பழ வகைகளில் மதுபானங்களை ஊற்றி ஊறல் போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஒரு நட்சத்திர உணவகத்தில் நடந்த நிகழ்வில், 150 கிலோ அளவிலான பழ வகை கள், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் இதற்கு பயன்படுத்தப்பட்டன.
இதனுடன் 25 லிட்டர் மதுபானங்களும் கலந்து ஊற வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் சுற்றுலாப் பயணிகளும் ஆர்வடன் பங்கேற்றனர். தயாரிப்பு பணியில் ஈடுபட்ட நட்சத்திர உணவகத்தின் உணவு தயாரிப்பாளர் கூறுகையில், "9 ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். இம்முறை 260 கிலோ கேக் தயாராகும்.
பாதம், முந்திரி, பிஸ்தா ஆகியவை கொண்டு ஊறவைத்து அதில் ஒயின் சேர்த்து தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளோம். கிறிஸ்துமஸ், புத்தாண்டை வரவேற்கவே இப்படி தயார் செய்கிறோம். வெளி நாடுகளில் பிரபலமாக உள்ள இந்நிகழ்வு தற்போது புதுச்சேரியிலும் கடந்த 10 ஆண்டுகளாக மேம்பட்டு வருகிறது" என்றார்.
முதல் முறையாக இந்தக் கேக் தயாரிக்கும் நிகழ்வில் பங்கேற்றோர் கூறுகையில், "கேக் தயாரிக்க பாதாம், முந்திரி, பிஸ்தாவை சேர்த்து பின்னர் ஒயின் சேர்த்து ஊறவைத்து தயாரிக்கும் நிகழ்வை முதல் முறையாக பார்க்கும் போது வியப்பாக உள்ளது. விடுமுறை காலமும், புத்தாண்டு வருகையும் இப்போதே கண்ணில் நிற்கிறது. இந்த அனுபவம் அலாதியானது" என்றனர் மகிழ்ச்சியுடன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT