Published : 18 Jan 2018 02:25 PM
Last Updated : 18 Jan 2018 02:25 PM
அம்பாளுக்கு உகந்த தை மாத வெள்ளிக்கிழமையில், அம்மன் கோயிலுக்குச் சென்று அவளை வணங்கினால், நம்மையும் நம் குடும்பத்தையும் தழைக்கச் செய்வாள் அம்பிகை!
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பார்கள். அதேபோல ஒவ்வொரு மாதமும் செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பிகைக்கு உரிய அற்புதமான நாட்கள். அதனால்தான், செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில், மகாசக்தி குடிகொண்டிருக்கும் தலங்களில் பெண்கள் முதலான பக்தர்கள் பலரும் வணங்கி வழிபடுகிறார்கள்.
அந்த வகையில் தை மாத வெள்ளிக்கிழமைகள், அம்பாளுக்கு ரொம்பவே விசேஷமானவை என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
தை மாத வெள்ளிக்கிழமை, நாளைய தினம் (19.1.18). எனவே இந்த நாளில், அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, அம்பாளை தரிசனம் செய்யுங்கள். முடிந்தால், செந்நிற மலர்கள் சூட்டி வழிபடுங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள்.
வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் அம்மன் கோயிலுக்குச் சென்று அல்லது அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கே உள்ள துர்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களையும் கண் திருஷ்டி முதலானவற்றையும் நீக்கியருளும் என்பார்கள். எனவே நாளைய வெள்ளிக்கிழமை நாளில், அம்பாளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். துர்கை சந்நிதியில் நெய் தீபம் அல்லது எள் தீபமேற்றி வழிபடுங்கள்.
வீட்டில் உள்ள திருஷ்டி முதலானவை நீங்கும். மங்கல காரியங்களை விரைவில் நடத்தித் தருவாள் அன்னை பராசக்தி!
தை முதல் வெள்ளி தொடங்கி, அடுத்தடுத்த தை வெள்ளியிலும் அம்மன் தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும். கூடவே, சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், வெண்பொங்கல், கேசரி என ஒவ்வொரு வாரமும் ஏதேனும் பிரசாதம் வழங்குங்கள். தனம் தானியம் பெருகி நிறைவாய் வாழ்வீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT