Last Updated : 18 Oct, 2023 08:51 PM

 

Published : 18 Oct 2023 08:51 PM
Last Updated : 18 Oct 2023 08:51 PM

சபரிமலையில் நடைதிறப்பு: புதிய வழித்தடமான தேனி ரயிலில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு

சபரிமலை செல்வதற்காக தேனி ரயிலில் வந்திருந்த ஐயப்ப பக்தகள். | படம்: என்.கணேஷ்ராஜ்

தேனி: சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து போடிக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சபரிமலைக்கு இந்த ரயிலில் வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் மலையாள மாதத்தின் முதல் நாளன்று சபரிமலையில் நடைதிறக்கப்படுவது வழக்கம். இதுதவிர மண்டலபூஜை, பங்குனி உத்திரம், திருஓணம், சித்திராட்ட திருநாள், மகரபூஜை, ஆராட்டுத் திருவிழா போன்ற பல்வேறு நாட்களிலும் சுவாமி தரிசனம் நடைபெறும். தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்வதற்கு பல்வேறு பாதைகள் உள்ளன. இதில் முக்கிய வழித்தடமாக தேனி உள்ளது.

சென்னை, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தேனி வழியே பக்தர்கள் அதிகளவில் சென்று வருகின்றனர். கடந்த 11 ஆண்டுகளாக தேனியில் ரயில் போக்குவரத்து இல்லாததால் பலரும் தென்காசி, புனலூர், கோட்டயம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியே சென்று வந்தனர். கடந்த ஜூனில் இருந்து தேனி மாவட்டத்துக்கு சென்னையில் இருந்து நேரடி ரயில் போக்குவரத்து தொடங்கி உள்ளது.

இதனைத் தொடர்ந்து பக்தர்கள் பலரும் மாதாந்திர சிறப்பு பூஜைக்காக இந்த ரயிலில் வரத் தொடங்கி உள்ளனர். மலையாள துலாம் மாதத்துக்கான (ஐப்பசி)நடை நேற்று (அக்.17) மாலை திறக்கப்பட்டு வரும் 22-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக பக்தர்கள் தேனிக்கு ரயிலில் பயணித்து வருகின்றனர்.

இது குறித்து சென்னையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கூறுகையில், "வழக்கமாக பொதிகை ரயிலில் தென்காசி சென்று அங்கிருந்து கார் மூலம் சபரிமலை செல்வோம். தற்போது தேனிக்கு ரயில் போக்குவரத்து தொடங்கியதால் இதில் வந்துள்ளோம். இங்கிருந்து குமுளி சென்றால் ஜீப், கார், பேருந்து என்று ஏராளமான வசதிகள் உள்ளன. ஆகவே ரயிலில் வந்திருக்கிறோம். வரும் கார்த்திகை, மார்கழியில் ஐயப்ப பக்தர்கள் பலரும் குழுவாக இந்த ரயிலில் பயணிக்க திட்டமிட்டுள்ளனர்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x