Published : 18 Oct 2023 04:06 AM
Last Updated : 18 Oct 2023 04:06 AM
கும்பகோணம்: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் கோனேரிராஜபுரத்தில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து மூத்த தேவி சிலையை கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கத்தினர் கண்டெடுத்துள்ளனர்.
இது தொடர்பாகச் சங்க நிறுவனரும், வரலாற்று ஆய்வாளருமான கும்பகோணம் ஆ.கோபி நாத் கூறியது: கோனேரிராஜபுரத்தில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் நாராயணன் மற்றும் வரலாற்று ஆய்வாளர் சு.சுவாமி நாதன் ஆகியோர் வழங்கிய தகவலின்படி, வடக்குத் தெருவின் வயல் பகுதியையொட்டிய வாய்க்காலில் கிடந்த கருங்கல்லை எடுத்து தூய்மைப் படுத்தியதில், அது, மூத்த தேவி சிலை எனும் தவ்வை கற்சிலை எனத் தெரியவந்தது.
வரலாற்றில் திருநல்லம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊரின் நடராஜர் உலகப் புகழ் பெற்றவர். இந்தக் கோயிலிருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ள வயலில் 3.5 அடி உயரம், 2.5 அடி அகலம் கொண்ட சோழர் காலத்தைச் சேர்ந்த இந்த கருங்கல்லினாலான சிலையில் மாந்தன், மாந்தியுடன் மூத்த தேவி காட்சியளிக்கிறார்.
வசீகரமான முகம், தலையில் கரண்ட மகுடம், காதில் குழைகளும், கழுத்தில் கண்டிகை, சவடி, சரப்பளி ஆகியவை அணிந்து அமர்ந்த நிலையில் உள்ளார். சிலையின் மார்பு பகுதி சிதைவுக்குள்ளாகியுள்ளது. இவருக்கு இடது பக்கத்தில் மகன் மாந்தன் சன்ன வீரம் தரித்தும், வலது பக்கத்தில் மகள் மாந்தி சுகாசனத்தில் அமர்ந்த கோலத்திலும் உள்ளார்கள். மாந்தியின் முகமும் சிதைவுக்குள்ளாகி உள்ளது.
மூத்த தேவியின் சின்னமான காக்கை கொடி மாந்தியின் அருகில் காணப்படுகிறது.பல்லவர்களின் ஆட்சியில் தமிழர்களின் தாய் தெய்வமாக மூத்த தேவி வழிபாட்டில் இருந்து உள்ளார். பிற்கால சோழர்கள் காலத்திலும் சேட்டை என்ற பெயரில் மூத்த தேவி வழிபாடு நடைபெற்றுள்ளதை கல்வெட்டு சான்றுகள் கூறுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT