Last Updated : 25 Jan, 2018 11:46 AM

 

Published : 25 Jan 2018 11:46 AM
Last Updated : 25 Jan 2018 11:46 AM

மரங்களுக்குச் செவிகொடுப்போம்

ன்னைக் கவனிப்பவர்களுக்கான பாடங்களை எப்போதும் இயற்கை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இயற்கையுடன் உரையாடுவதும் இயற்கையைக் கவனிப்பதும் நாம் நினைப்பதைவிட எளிமையானவை. இன்னும் சொல்லப்போனால், நாம் அப்படிச் செய்வது இயல்பான விஷயம். இயற்கையால் நமது உணர்வுகளையும் சிந்தனைகளையும் உணர முடியும். மரங்களால் நமக்குள் இருக்கும் ஆற்றலைப் புரிந்துகொள்ள முடியும். நாம் வாய்ப்பளித்தால் மரங்களால் நம்முடன் உரையாடவும் முடியும்.

மரங்கள் ஒன்றோடு ஒன்று பேச முடியும் என்பது அறிவியல்ரீதியாக நிரூபணமாயிருக்கிறது. ஆனால், அவை நாம் பேசுவதைவிடச் சற்று வித்தியாசமான முறையில் பேசுகின்றன. இந்த மரங்கள் தங்கள் வளங்களைக் காடு முழுவதும் பகிர்ந்துகொள்கின்றன. வயதான மரங்கள், கன்றுகள் வளர்வதற்கு உதவுகின்றன. ஆரோக்கியமான மரங்கள் நோயுற்ற மரங்கள் குணமடைவதற்கு உதவுகின்றன. நம்மாலும் மரங்களுடன் உரையாட முடியும். அதனால், தாவரங்களின் வாழ்க்கையை அவை வாழ்க்கைச் சுழற்சியின் எந்தக் கட்டத்தில் இருந்தாலும் மதிக்க வேண்டியது முக்கியம். அவை உலகில் மிக முக்கியமான பணியைச் செய்துகொண்டிருக்கின்றன. அவற்றுடன் உரையாடுவதற்கான நேரத்தை ஒதுக்கத் தயாராக இருந்தால், அவற்றிடமிருந்து பெரிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

மரங்களுடன் எப்படிப் பேசுவது?

ஒரு மரத்தின்மீது உங்கள் கைகளை வையுங்கள் அல்லது அந்த மரத்தின் கீழே அமர்ந்துகொள்ளுங்கள். அப்படியில்லாவிட்டால், புல்தரையில் படுத்துகொண்டு மரக்கிளைகளை அண்ணாந்து பாருங்கள்.

உங்களை அமைதிபடுத்திக்கொண்டு, முகத்தில் புன்னகையைக் கொண்டுவர முயலுங்கள். நம் ஆற்றலை அமைதி படுத்துவதற்கான எளிய வழியாகப் புன்னகைப்பதைக் கூறலாம். இயற்கையின் அமைதியான, அன்பான ஆற்றலைப் பெறுவதற்கு இந்தப் புன்னகை வழிவகுக்கும்.

“நீ எனக்கு ஏதாவது சொல்ல வேண்டுமென்று நினைக்கிறாயா?” என்று ஒரு மரத்திடம் கேட்கலாம்.

நீங்கள் சத்தமாகப் பேச வேண்டுமென்ற அவசியமில்லை. நம்முடைய சிந்தனைகளே ஆற்றல் வடிவத்தில் இருப்பதால் மரங்களால் அவற்றைக் கேட்க முடியும்.

மரம் உங்களுக்குப் பதிலளிப்பதை நீங்கள் கேட்கலாம் அல்லது உங்களால் மரத்தின் உணர்வுகளை உணர முடியும். இந்த மரத்துடனான உங்கள் உரையாடலை உணர முடியும்.

இயற்கை நம்முடன் தொலைஉணர்வால் (Telepathy) உரையாடுகிறது. அது பெரும்பாலும் படங்களாக நமக்குக் கிடைக்கின்றன. அதனால் கண்களை மூடியவுடன் நீங்கள் படங்களைப் பார்ப்பதுபோல இருக்கும். இது ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தைத் தரும்.

நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை இந்தப் படங்களின் வழியாக மரத்துக்குத் தெரியப்படுத்தலாம்.

அத்துடன், நீங்கள் மரத்திடம் எதைத் தெரியப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை உங்களால் சொல்ல முடியும். இதில் உங்கள் கற்பனைத் திறனை முழுமையாகப் பயன்படுத்துங்கள். இப்படித்தான் இயற்கை நம்முடன் உரையாடுகிறது.

மரங்களில் முகங்கள்

மரங்களில் முகங்களைக் கண்டுபிடிப்பது சுவாரசியமான விஷயம். சில நேரங்களில் ஒரேயொரு கண்ணை மட்டுமே உங்களால் கண்டுபிடிக்க முடியும். சில நேரங்களில் மரத்தின் முழு முகத்தையும்கூட உங்களால் அடையாளம் காண முடியும்.

மரத்துக்கு ஒரு முகத்தைக் கற்பனை செய்துகொண்டால் உரையாடுவது இன்னும் எளிமையாக இருக்கும். ஆனால், அதற்கு மனித முகம் இருக்காது. சில நேரங்களில் மரங்களில் உயிரினங்களின் முகங்களை அடையாளம் காண முடியும்.

‘வயதான மரங்களில் நிறைய முகங்களை அடையாளம் காண முடியும்’. ஒருவேளை, உங்களால் முகத்தைக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. நாம் திறந்த மனதுடன் இருந்தால், எந்த உருவக் கற்பனையும் இல்லாமல் நம்மால் மரங்களுடன் உரையாட முடியும். மரங்களின்மீது கைகளை வைத்து, அவற்றுடன் நமது குணப்படுத்தும் ஆற்றலைப் பகிர்ந்துகொள்ள முடியும். உங்களது குணப்படுத்தும் ஆற்றல் உள்ளங்கைகளில் பிரகாசமான பந்தைப் போல இருப்பதாகக் கற்பனைசெய்துகொள்ளுங்கள். இந்த உணர்வில் உங்கள் கவனத்தைக் குவிக்க வேண்டும். இந்த ஆற்றல் உங்களிடமிருந்து மரத்துக்குச் செல்வதை உணர முயலுங்கள். இப்படிச் செய்யும்போது, மரத்துடனான உரையாடல் இன்னும் எளிமையாகிறது.

மரங்களுக்கு மத்தியில் நடப்பது, அவற்றுடன் நேரத்தைச் செலவிடுவது, அவை பேசுவதைக் கவனிக்கத் தயாராக இருப்பது போன்றவற்றால் மரங்களுடன் நாம் எளிமையாக உரையாடலாம்.

இயற்கையை மனத்தூய்மையுடன் அணுகும்போது, அதனுடன் உரையாடுவதற்கான திறனை நாம் பெறுகிறோம். இந்த மரங்களுடனான உரையாடல் நமது ஆன்மிக வளர்ச்சிக்கும் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் தன்விழிப்பை ஏற்படுத்தவும் உதவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x