Published : 04 Jan 2018 10:54 AM
Last Updated : 04 Jan 2018 10:54 AM
ஒ
ரு பாரம்பரியமான குடும்பத்தில் பியானோ ஒன்று இருந்தது. ஆனால், அந்தக் குடும்பம் அதை எப்படி வாசிப்பது என்பதை முற்றிலுமாக மறந்துபோயிருந்தது. தலைமுறைகள் தோன்றின. அது ஓர் இசைக் கருவி என்பதைக் கூட அந்தக் குடும்பம் மறந்துவிட்டது. அந்த பியானோ, தூசி படிய ஆரம்பித்திருந்தது.
அது மிகவும் பெரிதாக இருந்தது. வீட்டின் பெரும்பகுதி இடத்தை அடைத்துகொண்டிருந்தது. ஒருநாள், அந்தக் குடும்பம் எதற்கும் பயன்படாமல் இருக்கும் அந்த பியானோவைத் தூக்கி எறிய நினைத்தது.
“இது ஒரு தொல்லை. இதை ஏன் நாம் வீட்டில் வைத்திருக்க வேண்டும்?” அந்தக் குடும்பத்தினர் பேசினார்கள். அவர்கள் அதை வீட்டில் இருந்து எடுத்துவந்து சாலையில் தூக்கிப்போட்டுவிட்டார்கள்.
அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தவுடன், சாலையிலிருந்த ஒரு பிச்சைக்காரர் அந்த பியானோவை இசைக்கத் தொடங்கினார்.
காலம் நின்றுபோனது. போக்குவரத்து ஸ்தம்பித்தது. அந்தக் குடும்பத்தினர் வெளியே வந்தார்கள். சுற்றியிருந்த வீட்டில் வசித்துவந்தவர்களும் வெளியே வந்தார்கள். அவர்கள் அனைத்தையும் மறந்துவிட்டார்கள். ஒரு மணி நேரத்துக்கு அந்தப் பிச்சைக்காரர் பியானோவை இசைத்தார்.
அந்த இசையின் இனிமையில் அவர்கள் மயங்கிபோயிருந்தார்கள். பிச்சைக்காரர் இசைப்பதை நிறுத்தியவுடன் அந்தக் குடும்பத்தினர் பியானோவைத் திரும்பக் கேட்டனர்.
‘இது உங்களுடையது இல்லை. ஏனென்றால், ஓர் இசைக் கருவி எப்போதுமே அதை இசைக்கத் தெரிந்தவர்களுக்குத்தான் சொந்தமாக இருக்க முடியும். வேறு யாரும் அதற்கு உரிமை கொண்டாட முடியாது. அந்த உங்கள் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக இருந்திருக்கலாம். ஆனால், அது உங்களுக்குச் சொந்தமானது கிடையாது. நீங்கள் இந்த இசைக் கருவிக்குத் தகுதியானவர்கள் இல்லை. நான்தான் இந்த பியானோவுக்குச் சொந்தக்காரர்’ என்று அந்தப் பிச்சைக்காரர் சொன்னார்.
அங்கே கூடியிருந்தவர்களும் பிச்சைக்காரர் கூறியதை ஆமோதித்தனர்.
ஓர் இசைக் கருவி அதை இசைக்கத் தெரிந்தவருக்குத்தான் சொந்தமாக இருக்க முடியும்.
வாழ்க்கையும் அது போலதான். யாரால் அதன் அடி ஆழத்துக்குச் செல்ல முடிகிறதோ அவர்களுக்குத்தான் அது சொந்தமாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT